தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

சிகிச்சை முடிந்து உடல் நலத்துடன் இல்லம் திரும்பிய திருத்தந்தை

ஏப்ரல் 2 ஞாயிற்றுக்கிழமை தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற இருக்கும் குருத்துஞாயிறு வழிபாட்டில் பங்கேற்பார் திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடந்த மார்ச் 29, புதன்கிழமை சுவாசத் தொற்றுநோய் காரணமாக உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 1, சனிக்கிழமை காலை சிகிச்சை முடிந்து நல்ல உடல்நலத்துடன் வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்திற்குத் திரும்பினார்.

ஏப்ரல் 1, சனிக்கிழமை காலை, ஜெமெல்லி மருத்துவமனையை விட்டுக் கிளம்பும் முன் அங்குள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திற்குத் திரும்பும் முன் உரோம் நகர் பாதுகாவலியான தூய மரியன்னை பெருங்கோவிலுக்குச் சென்று அன்னை மரியாவிற்குத் தனது நன்றியினையும் தெரிவித்தார்.

திருத்தந்தை மருத்துவமனையில் இருந்தபோது தனக்காகவும் தன்னுடைய உடல் நலனுக்காகவும் செபித்த அனைவருக்கும் தன் நன்றியினையும் மருத்துவமனை பணியாளார்களின் தியாகம் நிறைந்த பணிகளுக்காகப் பாரட்டுக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

மக்களை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்
மக்களை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்

மார்ச் 31, வெள்ளிக்கிழமை மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மருத்துவக் குழு, மேற்கொண்ட பரிசோதனைகளை மதிப்பாய்வு செய்து, இதுவரை உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புருனி அவர்கள் ஏப்ரல் 1, சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து திருத்தந்தை சாந்தா மார்த்தா இல்லம் திரும்பியதையும் அறிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 31, வெள்ளிக்கிழமை பிற்பகல் மருத்துவமனை ஆலயத்தில் சிறிது நேரம் செபித்த பின்னர் திருநற்கருணையை உட்கொண்டார் என்றும் மருத்துவமனையில் பணியாற்றும், நலப் பணியாளர்களுக்குத் தன் நன்றியினை தெரிவித்தார் என்றும் புருனி அவர்கள் தெரிவித்தார்.

குருத்து ஞாயிறுத் திருப்பலியில் திருத்தந்தை

சிகிச்சை முடிந்து வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்திற்கு ஏப்ரல்1, சனிக்கிழமை காலை திரும்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 2 ஞாயிற்றுக்கிழமை தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற இருக்கும் குருத்து ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்பார் என்றும் சிறப்பு வாகனத்தில் பெருங்கோவில் வளாகத்தை வந்தடைவார் என்றும் தெரிவித்தார் புருனி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 April 2023, 13:08