அன்னை மரியா, இயேசுவுடன் ஒரே ஆன்மாவாக ஒன்றித்திருந்தார்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புனிதமான, உண்மையுள்ள கடவுளின் மக்கள் நமக்குக் கற்பிக்கும் வழிகளான, ஆண்டவராகிய இயேசுவை நம்பிக்கையுடனும் அன்புடனும் பின்பற்றி வாழ உங்கள் அனைவரையும் அழைக்கிறேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 2, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு பெருக்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிக்களுக்கு தான் வழங்கிய மூவேளை செப உரைக்கு முன்பு இவ்வாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மகனைப் பின்தொடர்ந்த அன்னை மரியாவின் செயலை அவரிடமிருந்தும் கற்றுக்கொள்வோம் என்றும் கேட்டுக்கொண்டார்.
அன்னை மரியா தன் மகன் இயேசுவுடன் ஒரே ஆன்மாவாக ஒன்றித்திருந்தார் என்றும், அவரின் மீட்புத்திட்டம் குறித்து அவரைப் புரிந்துகொள்ளாத நிலையில், தன்னை முழுவதுமாக இறைத்தந்தையிடம் கையளித்துவிட்டார் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்பப்படுகிற, துரத்தப்பட்ட, கைவிடப்பட்ட மக்களிடையே வாழும் இயேசுவுடன் உடனிருக்க, அன்னை நமக்கு உதவுவாராக என்றும் கூறினார்.
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ள திருத்தந்தை 23-ஆம் ஜான் அமைப்பு, FOCSIV, Pro Civitate Christiana, Pax Christi மற்றும் பல்வேறு அமைப்புகளின் உதவிகளுக்காகவும், இதன் வழியாகப் போரால் உடைந்து உருகுலைந்துள்ள அம்மக்களுடன் தங்களின் நெருக்கத்தைக் காண்பித்துள்ள இத்தாலிய மக்கள், கிறிஸ்துவின் அமைதியின் அடையாளமாக விளங்கும் ஆலிவ் மரக்கிளைகளை வழங்கியுள்ளதற்காகவும் அவர்களுக்குத் தன் அன்பையும் ஆசீரையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்