தேடுதல்

சிலுவையுடன் ஹங்கேரி மக்கள் சிலுவையுடன் ஹங்கேரி மக்கள்  (AFP or licensors)

உக்ரைன் அகதிகளின் புகலிடமாக மாறியுள்ள ஹங்கேரி

எண்ணற்றோரின் குடிபெயர்வு மத்திய ஐரோப்பாவில் மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ள நிலையில் திருத்தந்தையின் திருப்பயணம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

2021ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டுத் தலைநகரில் அனைத்துலக நற்கருணை மாநாட்டையொட்டி மேற்கொண்ட திருப்பயணத்தின் நிறைவாக இவ்வாரம் வெள்ளி முதல் ஞாயிறுவரை அந்நாட்டுத் தலைநகரில் மூன்று நாள் திருப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 23, ஞாயிற்றுக்கிழமையன்று நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 28 முதல் 30 வரை ஹங்கேரி தலைநகரில் தான் மேற்கொள்ள உள்ள திருப்பயணம், ஐரோப்பாவில் போரின் குளிர்காற்று வீசிக்கொண்டிருக்கும் சூழலிலும், எண்ணற்றோரின் குடிபெயர்வு மத்திய ஐரோப்பாவில் மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ள நிலையிலும், இடம்பெறுகிறது என்பதையும் நினைவூட்டினார்.

தான் ஹங்கேரிய மக்களை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், தன் திருத்தூதுப் பயணத்திற்காக அம்மக்கள் அர்ப்பணத்துடன் தயாரித்துவருவதை தான் அறிந்துள்ளதாகவும் அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்கு தான் நன்றியுரைப்பதோடு இப்பயண வெற்றிக்காக செபிக்குமாறு விண்ணப்பிப்பதாகவும் கூறினார்.

போர்களையும் ஆக்ரமிப்புக்களையும் சந்தித்துள்ள ஹங்கேரிய தலைநகர் அண்மைக்காலங்களில் உக்ரைன் அகதிகளின் புகலிடமாகவும் மாறியுள்ள நிலையில் அங்கு அரசுத் தலைவர்களையும் தலத்திருஅவைத் தலைவர்களையும் சந்திப்பதோடு, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை தலைநகர் புதாபெஸ்தில் சந்திக்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோர், நோயாளிகள், அறிவியல் மற்றும் கலாச்சார உலகத்தினர், கிரேக்க கத்தோலிக்க சமூகத்தினர் என பல்வேறு தரப்பினரை தன் திருப்பயணத்தின்போது சந்திக்கவுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய மொழியில் தான் வழங்கவுள்ள ஆறு உரைகளில் ஐரோப்பிய ஒன்றிப்பு, இளையோரின் வருங்காலம், கிறிஸ்தவ சபைகளுடன் கலந்துரையாடல், நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல் போன்றவைகளை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர் இடம்பெற்றுவரும் உக்ரைனுடன் 135 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஹங்கேரி, உக்ரைன் அகதிகள் ஜெர்மனி, ஹாலந்து, இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர உதவும் பாலமாகச் செயல்படுகிறது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2023, 10:49