உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை இறைவேண்டல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஏப்ரல் 26, இப்புதனன்று காலையில் உரோம் மாநகர் மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று, அங்கு வீற்றிருக்கும் Salus Populi Romani, அதாவது உரோம் மக்களுக்கு நலமளிக்கும் அன்னை மரியா திருப்படத்தின் முன்பாக, தான் மேற்கொள்ளவிருக்கும் 41-வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை அர்ப்பணித்துச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் என்று திருப்பீடச் செய்தித்தொடர்பகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு முறையும், திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பும், பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய பின்பும், அன்னையின் திருப்படத்திற்குமுன் செபிப்பதை தன் வழக்கமாகக் கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 28, இவ்வெள்ளியன்று தொடங்கவிருக்கும் ஹங்கேரி திருத்தூதுப் பயணத்திற்காக அன்னை மரியாவிடம் இறைவேண்டல் செய்தார் என்றும் கூறியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே, அன்னை மரியாவின் திருஉருவத்தின் முன்பு சில நிமிடங்கள் அமைதியாக இறைவேண்டல் செய்தார் என்றும், ஹங்கேரி நாட்டிற்கான தனது 41-வது திருத்தூதுப் பயணத்தை மரியாவின் பாதுகாவலில் ஒப்படைத்து இறைவேண்டல் செய்த பிறகு அவர் உடனடியாக வத்திக்கான் திரும்பினார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 28 முதல் 30 வரை ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்விடம் ஐரோப்பாவின் இதயமாகக் கருதப்படுகிறது. போரின் பனிக்காற்று தொடர்ந்து வீசிவரும் இவ்வேளையில் திருத்தந்தை இப்பயணத்தை மேற்கொள்கின்றார்.
அன்னை மரியாவின் மீது தனிப்பற்று கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013-ஆம் ஆண்டு, மார்ச் 13-ஆம் தேதி, அதாவது, திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றதற்கு அடுத்தநாள், புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று அன்னை மரியாவின் படத்திற்கு முன் செபித்துவிட்டுத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்