பாதிக்கப்படுபவர்களுடன் உடனிருப்பதே கடவுளின் பாணி : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பெரும்பாலும் குரலற்றவர்களுக்குக் குரல் கொடுப்பதன் வழியாக, ஒவ்வொரு நபருக்கும் கடவுள் வழங்கிய மனித மாண்பிற்கு நீங்கள் சாட்சியாக இருக்கிறீர்கள்" என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கத்தோலிக்க விரிவாக்கச் சங்கத்தினரிடம் (Catholic Extension Society) கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 26, இப்புதனன்று, இவ்வமைப்பினரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் இன்றையக் கலாச்சாரத்தில் பாதிக்கப்படுபவர்கள்மீது காட்டும் சிறப்பான அக்கறைக்காக அவர்களைப் பாராட்டியதுடன், இந்த விதத்தில் பாதிக்கப்படுபவர்களின் குரல் கேட்கப்பட்டு, ஒட்டுமொத்த சமுதாயமும் பயன்பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கத்தோலிக்க விரிவாக்கச் சங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்காகவும், அண்மைய ஆண்டுகளில் Puerto Rico தீவை அழிவுக்குட்படுத்திய சூறாவளிகள் மற்றும் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, அதன் புனரமைப்புக்குத் தலத்திருஅவை மற்றும் அரசு மட்டங்களில் அதன் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காகவும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்காகப் பணிபுரிந்தமைக்காக 2023-ஆம் ஆண்டுக்கான Catholic Extension Spirit of Francis விருதை வென்ற இயேசுவின் மறைபரப்புப் பணியாளர்கள் சபையைச் சேர்ந்த (Missionaries of Jesus) அருள்சகோதரி Norma Pimentel-லுக்குத் தனது உரையின்போது பாராட்டுதல்களைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பொதுநலப் பணிகள் வழியாக அமெரிக்காவில் கத்தோலிக்கத் திருஅவையின் பணியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய தனிநபர் அல்லது குழுவை இந்த விருது அங்கீகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தோலிக்க விரிவாக்கச் சங்கம் என்பது தேசிய நிதி திரட்டும் 501 அமைப்பாகும், இது அமெரிக்கா முழுவதும் உள்ள ஏழை மறைமாவட்டங்களை ஆதரிக்கிறது மற்றும் பலப்படுத்துகிறது. மக்கள், உள்கட்டமைப்பு மற்றும் அமைச்சகங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள் மற்றும் பணிகள் வழியாக மறைமாவட்டங்கள் மற்றும் தலத்திருஅவைகளுக்கு நிதி மற்றும் ஆதாரங்களை வழங்குகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்