தேடுதல்

Péter Pázmány கத்தோலிக்கப் பல்கலைக்கழகதில் திருத்தந்தை Péter Pázmány கத்தோலிக்கப் பல்கலைக்கழகதில் திருத்தந்தை   (Vatican Media)

உண்மை அறியும் திறவுகோல் அன்பிலிருந்து பிறக்கிறது:திருத்தந்தை

வாழ்க்கையின் மறைபொருள் என்பது, சிறிய காரியங்களில் அக்கறை கொண்டவர்களுக்கே வெளிப்படுத்தப்படுகிறது : திருந்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரல் 30, ஞாயிறன்று, ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரின் அருகிலுள்ள Péter Pázmány கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் கல்வி மற்றும் கலாச்சார உலகினருக்குத் திருத்தந்தை வழங்கிய அருளுரை.

அன்பான சகோதரர் சகோதரிகளே! நூறு ஆண்டுகளுக்கு முன்பு, Romano Guardini, ஒரு சிறந்த அறிஞர் மற்றும் ஆழ்ந்த இறைநம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்தார். ஒரு அற்புதமான ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைகளின் அழகைப் பற்றி சிந்திப்பதில், இவர் சமகால கலாச்சாரத்தின் ஆழமான நுண்ணறிவைக் கொண்டிருந்தார்.

அறிவின் இரண்டு வழிகள்

அவர் கூறியது போல், ‘அறிவதற்கு இரண்டு வழிகள் உள்ளன’ என்பதை நான் இந்த நாள்களில் மிகவும் தெளிவாக உணர்ந்தேன். முதலாவது, ஒருவர் ஒரு விடயத்திலும் அதன் சூழலிலும் மூழ்குகிறார். ஊடுறுவுவது, உள்ளே செல்வது, வாழ்வதுதான் இதன் நோக்கம். இரண்டாவது, ஆதிக்கமனப்பான்மைக் அடிப்படையாகக் கொண்டது. அதாவது, ஆட்சி அரியணையில் அமர்ந்துகொண்டு அதிகாரம் செலுத்துவது. முதலாவது, பணியார்வத்தால் (rule by service) ஆட்சி செய்வது. இயற்கையான சாத்தியக்கூறுகளிலிருந்து உருவாக்கப்பட்டது, இது நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறாது." இது, ஆய்வு செய்வதில்லை; பகுப்பாய்வு செய்கிறது. இது உலகை குறித்த ஒரு படத்தை உருவாக்கவில்லை, ஆனால், ஒரு சூத்திரம், பகுத்தறிவுடன் கூடிய ஒரு சட்டத்தை உருவாக்குகிறது.

அறிவின் இந்த இரண்டாவது வடிவில், பொருள்கள் மற்றும் ஆற்றல் ஆகியவை இயந்திரம் போல ஒரே முனையில் இயக்கப்படுகின்றன. அதாவது, இது இயந்திரத்தனம் கொண்டது. இதன் விளைவாக உயிருள்ள மக்களைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பம் உருவாகிறது. இங்கே, Guardini தொழில்நுட்பத்தை அலகையின் வழிகொண்டதாகக் காட்டவில்லை, இது வாழ்க்கை மற்றும் தகவல்தொடர்புகளை மேம்படுத்துகிறது மற்றும் பல நன்மைகளைத் தருகிறது, ஆனால், இது ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும் நம் வாழ்வை இது கட்டுப்படுத்தும் என்ற ஆபத்தையும் எச்சரித்தார்.

வாழ்க்கை அதன் "வாழும்" தன்மையைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்பது, குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் அறிவியலில் ஆராய்ச்சி மையமாக இருக்கும் இவ்விடத்தில் கேட்க வேண்டிய கேள்வி இது. உண்மையைச் சொல்வதானால், Guardini முன்னறிவித்தவற்றில் பெரும்பாலானவை இன்று நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. சுற்றுச்சூழல் நெருக்கடியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும், அதில் இயற்கையானது நம் கைகளில் அதன் சுரண்டலுக்கு எதிர்வினையாற்றுகிறது.

தனிநபர்கள் மீதும் அவர்களது உறவுகள் மீதும் கவனம் செலுத்தாமல், தனிநபரின் தேவைகளில் மூழ்கி, ஆதாயம் மற்றும் அதிகாரத்தின் மீது பேராசை கொண்டவர், அதன் விளைவாக இனவாதப் பிணைப்புகளின் அரிப்பு மற்றும் அந்நியப்படுதல் மற்றும் பதட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நமது போக்கைப் பற்றியும் நாம்  இப்போது சிந்திக்கலாம். அவை இனி இருத்தலியல் நெருக்கடிகள் (existential crises) அல்ல, சமூகப் பிரச்சனைகள் (societal problems) என்பதை உணர்வோம்.

உண்மைக் கலாச்சாரம்

ஒரு பல்கலைக்கழகம் என்பது, அதன் பெயரே குறிப்பிடுவது போல, திறந்த நிலையில் சிந்தனை வெளிப்பட்டு வளர்ச்சி பெறும் ஒரு இடமாகும். இது ஒரு ‘கோவில்.’ அறிவு ‘திரட்டுதல்’ மற்றும் ‘உடமையாக்கிக்கொள்தல்’ என்ற கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, இதனால் கலாச்சாரம் ஆகலாம், அதாவது நமது மனிதகுலத்தின் வளர்ப்பு" மற்றும் அதன் அடிப்படை உறவுகள் என்ற நிலையில் இது ஒரு கலாச்சாரமாக மாற்றம் பெறுகின்றது. இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் கூறியது போல், “கலாச்சாரமானது மனிதரின் முழுமையான பரிபூரணத்தை நோக்கி, சமூகம் மற்றும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் நன்மைக்காக வழிநடத்தப்பட வேண்டும். வியப்பு, புரிதல், தனிப்பட்ட தீர்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மத, தார்மீக மற்றும் சமூக உணர்வை வளர்ப்பதற்கான சிந்தனைக்கான திறனை ஊக்குவிக்கும் வகையில் அது மனதை வளர்க்க வேண்டும் (Gaudium et Spes, 59 - Joy and Hope-59)

மிகப்பெரும் அறிவாற்றல் கொண்டவர்கள் எப்போதும் எளிமையாக இருப்பார்கள் என்பதே உண்மை என்பதை நாம் அறிவோம். வாழ்க்கையின் மறைபொருள் என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, சிறிய காரியங்களில் அக்கறை கொண்டவர்களுக்கே வெளிப்படுத்தப்படுகிறது.

"சிறிய விவரங்களை ஆராய்வதால், கடவுள் பணியின் சிக்கலான தன்மையில் நாம் மூழ்கிவிடுகிறோம்." என்ற மகத்தான கருத்தைக் கூறினார் Dorottya.  இந்த விதத்தில் பார்க்கும்போது, கலாச்சாரம் உண்மையில் நம் மனிதகுலத்தை தக்கவைக்கிறது மற்றும் பாதுகாக்கிறது. இது நம்மை சிந்தனையில் மூழ்கடித்து, இந்தத் தருணத்தின் நாகரீகங்களுக்கு இரையாகாத, ஆனால். செயல்களின் எதார்த்தத்தில் உறுதியாக உள்ள நபர்களை வடிவமைக்கிறது.

மேலும், அறிவாற்றல் கொண்ட எளியவர்கள், திறந்த மற்றும் தகவல்தொடர்புடன் இருக்க வேண்டிய கடமையை உணர்ந்தவர்கள், ஒருபோதும் வளைந்து கொடுப்பதுமில்லை, போரிடுவதுமில்லை. கலாச்சாரத்தை உண்மையாக நேசிப்பவர்கள், உண்மையில், முழுமையாக திருப்தி அடைவதில்லை; அவர்கள் எப்போதும் நலமான உட்புற ஓய்வின்மையை (restlessness) அனுபவிக்கிறார்கள்.

அவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள், கேள்விகளை எழுப்புகிறார்கள், ஆபத்துகளை எடுத்துக்கொள்கிறார்கள், தொடர்ந்து ஆய்வு செய்கிறார்கள். அவர்கள் தங்கள் நம்பிக்கைகளுக்கு அப்பால் செல்ல முடியும் மற்றும் வாழ்க்கையின் மறைபொருளில் பணிவுடன் மூழ்கிவிட முடியும். இது மனநிறைவற்றவர்களுக்கு அல்ல (complacent), இடைவிடா இயக்கத்திலிருப்பவர்களுக்கே (restlessness) தன்னை வெளிப்படுத்துகிறது. மேலும் இது  மற்ற கலாச்சாரங்களுக்கும் மனம் திறக்கச் செய்கிறது மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கிறது. இதுவே பல்கலைக் கழகத்தின் ஆன்மாவாகும். இந்த அனுவத்திற்காக நன்றி.

தன்னறிவின் பயணத்தில் உடன்செல்லும் கலாச்சாரம்

‘தன்னறிவின் பயணத்தில் கலாச்சாரம் நம்முடன் செல்கிறது’ மற்றும் ‘உன்னையே நீ அறிவாய்’ என்ற இரண்டு சிந்தனைகளை இறுதியாக உங்களுக்கு முன்வைத்து எனது உரையை நிறைவு செய்ய விரும்புகின்றேன்.

இவைகள் இரண்டும் நமது வரம்புகளை அடையாளம் காணவும், அதன் விளைவாக, தன்னிறைவு என்ற அனுமானத்தைக் கட்டுப்படுத்தவும் நமக்கு அறிவுரை கூறுகின்றன. இது துல்லியமாகப் பலனளிக்கிறது, ஏனென்றால் நாம் படைப்புகள் என்பதை உணர்ந்தவுடன், நாம் படைப்பாற்றல் பெறுகிறோம். உலகில் ஆதிக்கம் செலுத்துவதற்குப் பதிலாக, உலகில் மூழ்கிவிடக் கற்றுக்கொள்கிறோம்.

தொழிநுட்ப சிந்தனையானது எந்த வரம்பும் இல்லாத ஒரு முன்னேற்றத்தைத் தொடரச் செய்கிறது, ஆனால், சதை மற்றும் இரத்தம் கொண்ட மனிதர்கள் உடையக்கூடியவர்கள் அதாவது, பலவீனமுடையவர்கள். இதைத் துல்லியமாக அனுபவிப்பதன் வழியாக, அவர்கள் கடவுளைச் சார்ந்திருப்பதையும் மற்றவர்களுக்கும் படைப்புக்கும் உள்ள தொடர்பையும் உணர்ந்து கொள்கிறார்கள்.

உன்னையே நீ அறிவாய்

‘உன்னையே நீ அறிவாய்’ என்ற இரண்டாவது சிந்தனை, உண்மையுடன் ஒன்றிணைந்து செல்கிறது. இது "உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" (யோவா 8:32) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ஹங்கேரி, உண்மை எனத் திணித்துக் கொண்ட கருத்தியல்களில் வெற்றி கண்டது, ஆனால், சுதந்திரத்தை வழங்கத் தவறிவிட்டது. இன்றும்கூட அந்த ஆபத்து உள்ளது.

இதனை பொதுவுடைமையிலிருந்து நுகர்வியத்திற்கு (communism to consumerism) மாறுவதாக நான் நினைக்கிறேன். பொதுவுடமை ஒரு சுதந்திரத்தை வழங்கியது, இது கட்டுப்படுத்தப்பட்ட, வெளியில் இருந்து வரையறுக்கப்பட்ட, வேறொருவரால் தீர்மானிக்கப்பட்டது.

நுகர்வு மற்றும் புறநிலைப் (consumption and material objects) பொருள்களுக்கு மக்களை அடிமைப்படுத்தும் ஒரு மகிழ்ச்சியான, இணக்கமான, சுதந்திரத்தை நுகர்வியம் உறுதியளிக்கிறது. இது கண்மூடித்தனமான சுதந்திரத்திலிருந்து கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்கு மாறும் நிலையை எடுத்துக்காட்டுகிறது. இதற்கு மாறாக, உண்மை (the truth) நம்மை நிர்ணயம் மற்றும் குறுகிய தன்மையிலிருந்து (fixations and our narrowness) விடுவிக்கிறது என்று கூறி, நம்மை முன்னோக்கி நகர்த்தும் ஒரு புதிய வழியைக் காட்டுகின்றார் இயேசு.

ஆகவே, இந்த உண்மையை அணுகுவதற்கான திறவுகோல் அன்பிலிருந்து ஒருபோதும் பிரிக்கப்படாத அறிவின் ஒரு வடிவமாக அமைகிறது. இது உறவு, மனத்தாழ்மை மற்றும் திறந்த, உறுதியான மற்றும் வகுப்புவாத, துணிவான மற்றும் ஆக்கபூர்வமான அறிவைக் குறிக்கிறது. இதனை எடுத்துரைப்பதற்கும் நம்பிக்கையை வளர்பதற்கும்தான் பல்கலைக்கழகங்கள் அழைக்கப்படுகின்றன.

எனவே, இந்தப் பல்கலைக்கழகமும், மற்ற ஒவ்வொரு பல்கலைக்கழகமும் எப்போதும் உலகளாவிய மற்றும் சுதந்திரத்தின் கலங்கரை விளக்கமாக, மனிதநேயத்தின் பயனுள்ள பயிலரங்கமாக, நம்பிக்கையின் ஆய்வகமாக இருக்கும் என்ற எனது நம்பிக்கையை இந்தத் தருணத்தில் வெளிப்படுத்துகிறேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்கள் அனைவருக்கும் எனது ஆசீரை வழங்குகின்றேன். இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

கல்வி மற்றும் கலாச்சார உலகினருக்கு திருத்தந்தையின் உரை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2023, 16:55