தேடுதல்

மாரனைட்  திருஅவைத்  தலைவர்களுடன்  திருத்தந்தை மாரனைட் திருஅவைத் தலைவர்களுடன் திருத்தந்தை 

கீழைரீதி திருஅவைகளில் வாக்குப்பதிவில் வயது வரம்பு

கீழைரீதி திருஅவையில் 80 வயதிற்கு மேற்பட்ட முதுபெரும் தந்தையர்கள் மற்றும் ஆயர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தடைச் செய்யும் புதிய சட்ட திருத்தம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கீழைரீதி திருஅவைகளில் புதிய முதுபெரும் தந்தையர்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவில் புதியதொரு திருத்தத்தை கொணர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையை தெர்ந்தெடுக்கும் கர்தினால்களுக்கு வயதுவரம்பு இருப்பதுபோல் கீழைரீதி திருஅவைகளிலும் வாக்குப்பதிவில் கலந்துகொள்வோருக்கு வயது வரம்பு கொணரப்பட வேண்டும் என அத்திருஅவைகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அது குறித்த திருஅவைச் சட்டத்தில் மாற்றத்தைக் கொணர்ந்து தன் சுயவிருப்பத்தின் பேரில் என்ற Motu Proprio ஒன்றை ஏப்ரல் 16ஆம் தேதி கையெழுத்திட்டு, எபரல் 17, திங்களன்று வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

80 வயதிற்கு மேற்பட்ட முதுபெரும் தந்தையர்கள் மற்றும் ஆயர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தடைச் செய்யும் இப்புதிய சட்ட திருத்தம், ஒரு விதிவிலக்கையும் கொணர்ந்துள்ளது. அதாவது, 80 வயதானபோதிலும், அவர்கள் பதவியில் இருந்தால் அவர்களுக்கு வாக்குரிமை உண்டு என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கீழைரீதி திருஅவைகளின் உயர் அதிகாரிகளின் விண்ணப்பதை ஏற்று, கீழைரீதி திருஅவைகளுக்கான துறை மற்றும் சட்ட ஏடுகளின் துறை ஆகியவற்றின் கலந்தாலோசனையுடன் இம்முடிவை எடுத்துள்ளதாக திருத்தந்தை தன்  MOTU PROPRIO அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கீழைரீதி திருஅவை ஒன்றின் முதுபெரும் தந்தைக்கான தேர்வில் அத்திருஅவையின் ஆயர் மாமன்றத்தின் அங்கத்தினர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உண்டு என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

80 வயதிற்கு மேல் வாக்குரிமை இல்லையெனினும், முதுபெரும் தந்தை விரும்பினால் அவர்களை ஆலோசனைகளுக்கென அழைக்கலாம் எனவும், ஆயர் ஒருவர் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும்போது, மூன்று பெயர்கள் தேர்வுச் செய்யப்பட்டு முதுபெரும் தந்தை வழியாக இரகசியமாக திருத்தந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேண்டும் எனவும் திருத்தந்தையின் புதிய அறிக்கை கோருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2023, 15:05