புதன் மறைக்கல்வி உரை - நற்செய்தி அறிவிப்பில் பேரார்வம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நற்செய்தி அறிவிப்பதில் விசுவாசிகளின் அப்போஸ்தலிக்க பேரார்வம் என்ற தலைப்பில் புதன் மறைக்கல்வியுரைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரமும் இவ்வாரமும் சான்று பகர்வோர் என்ற உபதலைப்பின் கீழ் புனித பவுல் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்து வருகிறார். முதலில் புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமடலில் இருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.
எனவே, பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமை பெறும்படி, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆகையால், உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக் கொண்டு, நீதியை மார்புக்கவசமாக அணிந்து நில்லுங்கள்; அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை உங்கள் காலில் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள். (எபே 6,13-15)
இதன்பின்னர், திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வுத் தொடர்ந்தது.
அன்பு சகோதரரே சகோதரிகளே, அப்போஸ்தலிக்க பேரார்வம் குறித்த நம் தொடர் மறைக்கல்வித் தொடரில், நாம் புனித பவுலின் எடுத்துக்காட்டு குறித்து நோக்கிவருகிறோம். திருஅவையை துன்புறுத்துபவராக தன் பணியை துவக்க காலத்தில் கொண்டிருந்த புனித பவுலுக்கு, தவறாக வழிநடத்தப்படும் பற்றார்வம் குறித்து தெரியும், அவர் துவக்கத்தில் கொண்டிருந்த பற்றார்வம் இயேசுமீது கொண்ட அன்பிலிருந்து பிறந்ததல்ல, மாறாக, தன்னுரிமையை நிலைநிறுத்தும் மாயையிலிருந்து பிறந்ததாகும். புனித பவுல் கற்பிப்பதுபோல், நற்செய்தி மீதான உண்மையான பற்றார்வம் என்பது, கிறிஸ்துவையும் அவர் உயிர்ப்பின் வல்லமையையும் முற்றிலும் மையம் கொண்டதாக உள்ளது. புனித பவுல் தன் திருமடல்களில் கடவுளின் படைக்கலங்களை அணிவது குறித்து, நற்செய்தியை அறிவிக்க எப்போதும் கால்களில் மிதியடிகளைப் போட்டுத் தயாராக இருப்பது குறித்து எடுத்துரைக்கிறார். இந்த உருவகம், சொல்திறமிக்கதாக உள்ளது. ஏனெனில், நற்செய்தி அறிவிப்பவரின் கால்கள் ஆழமாக வேரூன்றியதாக அதேவேளை தொடர்ந்து சென்றுகொண்டேயிருப்பதாக காட்டப்படுகிறது. நற்செய்தி அறிவிக்கும் முயற்சிகளில் புதிய சூழல்களை படைப்புத்திறனுடனும், ஆழ்ந்த நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்கிறது. நம் தினசரி வாழ்வில், உயிர்த்த கிறிஸ்துவை, அவரின் அமைதி மற்றும் முழுமை குறித்த வாக்குறுதியை எவ்வாறு மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது என்பது குறித்து பற்றார்வத்துடன் சிந்திப்போம்.
இவ்வாறு தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்