உயிர்ப்புப் பெருவிழா வழிபாடு
மெரினா ராஜ் - வத்திக்கான்
உயிர்ப்புப் பெருவிழாவை முன்னிட்டு தூய பேதுரு பெருங்கோவில் வளாகம், திருப்பலி பீடம், நடுமாடம் ஆலயம் போன்றவற்றை வேர்ல்ட் ஆஃப் ஸ்ப்ரே ரோஸஸ் என்னும் அமைப்பினர் அலங்கரித்திருந்தனர். வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகமானது வானவில்லின் வண்ணங்களை பிரதிபலித்தது. ஏறத்தாழ 50,000 மக்கள் வத்திக்கான் வளாகத்தைச் சூழ்ந்திருக்க திருத்தந்தை உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை இலத்தீனில் துவக்கினார். இஸ்பெயின் மற்றும் பிரெஞ்சு மொழிகளில், முதலாம் மற்றும் இரண்டாம் வாசகங்கள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலத்தீனிலும் கிரேக்கத்திலும் நற்செய்தி வாசகமானது வாசிக்கப்பட்டது. இத்திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுறையாற்றவில்லை. நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து சீனம். ஜெர்மானியம், ஆங்கிலம் அரபு இத்தாலியம் ஆகிய மொழிகளில் நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் வாசிக்கப்பட்டன.
திருப்பலியின் காணிக்கை மன்றாட்டைத் தொடர்ந்த வழிபாட்டு நிகழ்வுகளை கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் வழி நடத்தினார். திருப்பலியை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளைத் தனது வாகனத்தில் இருந்தபடியே வலம் வந்து தனது உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களை கூறினார். இத்திருப்பலியை நிறைவுசெய்து பகல் 12 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலின் நடுவில் உள்ள மேல்மாடத்தில் நின்று, உரோமை நகருக்கும், உலகுக்குமென, ஊர்பி எத் ஓர்பி செய்தியையும், சிறப்பு ஆசீரையும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்