உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி
மெரினா ராஜ் - வத்திக்கான்
கன்னி மரியா ஈன்ற கனியாம் இயேசு சிலுவையில் அன்று பலியானார். இன்றோ, மீட்பின் ஒளியானார். அகண்ட ஆழியைச் சிப்பிகள் குடித்திட முடியாது. சிறு பனித்துளி உயர் மலையினை உடைத்திட முடியாது. நதியினை ஈட்டிகள் கிழித்திட முடியாது. இறை மாட்சியை எதுவும் அழித்திட முடியாது என்பதை நிரூபிக்க இயேசு உயிர்த்து விட்டார்! கல்லறைக்குள் துயின்ற காலங்களின் கதிரவனாம் இயேசு கண் விழித்து எழுந்து விட்டார். முடிவற்றை இறைவனை மூடி வைக்க முடியாமல், தன் முகப்பைத் திறந்தது கல்லறை. அன்று திறந்தது கல்லறை மட்டுமல்ல மூடப்பட்டுக் கிடந்த பல இதயங்களும் இல்லங்களும்தாம். இத்தகைய சிறப்பு மிக்க உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமை உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, அதாவது, இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்ற திருப்பலிக்கு அதிகாலை முதலே திருப்பயணிகளின் கூட்டம் கூடியது. உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு தூய பேதுரு பெருங்கோவில் வளாகம், திருப்பலி பீடம், நடுமாடம் ஆலயம் போன்றவற்றை வேர்ல்ட் ஆஃப் ஸ்ப்ரே ரோஸஸ் என்னும் அமைப்பினர் அலங்கரித்திருந்தனர். வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகமானது வானவில்லின் வண்ணங்களைப் பிரதிபலித்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்