மக்களில் மகிழ்ச்சியை விதைப்பவர்களாகச் செயல்படுவோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு கேளிக்கை நிகழ்ச்சிகளை வழங்கும் இத்தாலியக் குழுவின் அங்கத்தினர்களை திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரைவழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்குழுவினர் மக்களில் மகிழ்ச்சியை விதைப்பவர்களாகச் செயல்படுவதாக தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.
ரங்க இராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டுக்களுடன் ஊர் ஊராகச் சென்று மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் U.N.A.V. என்ற குழுவினர், Migrantes என்ற கிறிஸ்தவ அமைப்பினருடன் இணைந்து நம்பிக்கை மற்றும் விசுவாச உணர்வுகளை முன்னோக்கி எடுத்துச் செல்வதை தான் அறிவேன் என்றார் திருத்தந்தை.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் முடங்கிப் போயிருந்த இந்த கேளிக்கை விளையாட்டுக்கள், குறிப்பாக சிறார்க்கான இந்த கேளிக்கைகள், தற்போது மீண்டும் துவக்கப்பட்டிருப்பது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையரசின் நற்செய்தியை ஊர் ஊராக, நகர் நகராகச் சென்று தங்கள் நடவடிக்கைகள் வழி அறிவித்துவரும் இவர்களுக்கு தன் பாராட்டையும் வெளியிட்டார்.
தங்கள் கேளிக்கை விளையாட்டுக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் வழியாக மக்களிடையே மகிழ்ச்சியை விதைப்பவர்களாகச் செயல்படும் இக்குழுவினர், விசுவாசத்தில் திறந்த வாழ்வைக் கொண்டவர்களாக, இயேசுவுடன் ஆன சந்திப்பில் பலம் பெற்றவர்களாக, அனைவர் முகத்திலும் புன்னகையை விதைப்பவர்களாக உள்ளார்கள் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தினசரி வாழ்வில் பல்வேறு கவலைகளை அனுபவித்துவரும் இளையோர், சிறார் மற்றும் பெரியவர்களுக்கு மகிழ்ச்சியின் காரணமாக இருந்து அவர்களை கவலைகளிலிருந்து திசைத் திருப்பும் பணி முக்கியமானது என்றுரைத்த திருத்தந்தை, தங்கள் எளிய வழிகளால் இவர்கள் மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றனர் என்றார்.
கைத்தொலைபேசிகளாலும், கணனிகளாலும் ஒவ்வொருவரும் தனிமைப்பட்டுபோய் நிற்கும் இன்றைய உலகில், மக்களை வளாகங்களில் ஒன்று கூட்டி அவர்கள் ஒருவர் ஒருவருடன் உரையாடுவதற்கு வழிவகைச் செய்யும் இந்த குழுவினரின் சேவை பாராட்டும்படியானது எனவும் மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்