ஏப்ரல் மாதத்திற்கான திருத்தந்தையின் செபக் கருத்து
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வன்முறை வேண்டாம், போர் வேண்டாம், ஆயுதம் வேண்டாம் மாறாக, அமைதியான கலாச்சாரத்தை உருவாக்க உழைப்போம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 30, இவ்வியாழனன்று வெளியிட்ட தனது ஏப்ரல் மாத செபக் கருத்தில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாடுகளும் அதன் குடிமக்களும் ஆயுதங்களைக் குறைப்பதன் வழியாக, அமைதியையும் அகிம்சையையும் பரப்ப நாம் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
புனித 23-ஆம் ஜான், ‘அவனியில் அமைதி’ என்ற திருமடலை வெளியிட்ட அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது, வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி 60 ஆண்டுகள் நிறைவுறும் வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது செய்தியை புதுப்பித்து, "போர் மதியற்றதனம் என்றும், அது பகுத்தறிவு வாதத்தால் நியாயப்படுத்தப்பட முடியாதது." என்றும் தனது செபக் கருத்தில் கண்டனம் செய்துள்ளார்.
ஏப்ரல் மாதத்திற்கான செபக் கருத்தைக் கொண்ட காணொளியில், அமைதி கலாச்சாரத்தைக் கட்டி எழுப்புவதற்கு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குறைந்தளவில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நாடவேண்டும் என்றும், ஆயுதங்களற்ற நிலையில்தான் ஒரு நிலையான அமைதி நிறைந்த சூழலை உருவாக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், அன்றாட வாழ்விலும் அனைத்துலக உறவுகளிலும் நமது செயல்களுக்கு அகிம்சையை வழிகாட்டியாகப் பயன்படுத்துங்கள் என்றும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்