தேடுதல்

திருத்தந்தையுடன் கலாபிரியா பகுதியின் ஆயர்கள், குருத்துவ பயிற்சி இல்ல அதிபர்கள், பயிற்சி வழங்குவோர், மற்றும் குருத்துவ பயிற்சி மாணவர்கள் திருத்தந்தையுடன் கலாபிரியா பகுதியின் ஆயர்கள், குருத்துவ பயிற்சி இல்ல அதிபர்கள், பயிற்சி வழங்குவோர், மற்றும் குருத்துவ பயிற்சி மாணவர்கள்  (ANSA)

திருத்தந்தை : இயேசுவோடு தங்கியிருப்பதே நமது அடிப்படை

என்ன தேடுகிறீர்கள்?” என இயேசு கேட்ட கேள்வியை இன்று குருத்துவ பயிற்சி மாணவர்களையும் அருள்பணியாளர்களையும் நோக்கி இறைவன் கேட்கிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இத்தாலியின் கலாபிரியா பகுதியின் ஆயர்கள், குருத்துவ பயிற்சி இல்ல அதிபர்கள், பயிற்சி வழங்குவோர், மற்றும் குருத்துவ பயிற்சி மாணவர்களை மார்ச் 27, திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு, குருத்துவ மாணவர்களுக்கு என எடுக்கப்பட்டிருக்கும் தலைப்பை மையமாக வைத்து உரை வழங்கினார்.

புனித யோவான் நற்செய்தி முதல் பிரிவு, இறைவார்த்தை 39ல் காணப்படும் ‘அவர்கள் அவரோடு தங்கினார்கள்’ என இயேசுவின் முதல் சீடர்களைப் பற்றிக் கூறும் வார்த்தைகள் இவ்வாண்டின் கலாபிரியா பகுதி குருத்துவ மாணவர்களின் வழிநடத்தலுக்கு எடுக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவோடு தங்கியிருப்பதே நமது அடிப்படை என தலத்திருஅவை அதிகாரிகளிடம் கூறினார்.

தன்னைப் பின்தொடர்ந்த யோவானின் சீடர்களை நோக்கி, “என்ன தேடுகிறீர்கள்?” என இயேசு கேட்ட கேள்வியை இன்று குருத்துவ பயிற்சி மாணவர்களையும் அருள்பணியாளர்களையும் நோக்கி இறைவன் கேட்கிறார் என அவர்களிடம் உரைத்தார் திருத்தந்தை.

மனித குல துன்பங்களோடு இணைந்து நடத்தல், இயேசுவைப்போல் தந்தையாம் இறைவனின் கனிவை வெளிப்படுத்துதல் போன்றவைகளை குருத்துவ மாணவர்களுக்கு முன்வைத்த திருத்தந்தை, இளையோருக்கு நற்செய்தி அறிவித்தலின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.

ஒவ்வொருவரையும் அன்புகூர்ந்து அனைத்தையும் பிறரன்பில் ஆற்றுங்கள் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்தும் பிறரன்பிலும், ஒன்றிப்பிலும், உடன்பிறந்த உணர்வுடனும் ஆற்றப்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2023, 15:14