தேடுதல்

ஈக்குவதோர் நில அதிர்ச்சியின் பாதிப்புகள் ஈக்குவதோர் நில அதிர்ச்சியின் பாதிப்புகள்  (ANSA)

ஈக்குவதோர் மக்களுடன் திருத்தந்தையின் அருகாமை

ஈக்குவதோர் நாட்டிற்கான செப விண்ணப்பத்திற்குப்பின், போரால் துன்புறும் உக்ரைன் நாட்டிற்காக செபிக்குமாறு மீண்டுமொருமுறை அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மார்ச் 18, சனிக்கிழமை இரவு ஈக்குவதோர் நாட்டில் இடம்பெற்ற பூமி அதிர்வு மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களோடு தான் நெருக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மார்ச் 19, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் வழங்கிய நண்பகல் மூவேளை செப உரைக்குபின் இதனை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பூமி அதிர்வில் உயிரிழந்தவர்களுக்காகவும் காயமுற்றவர்களுக்காகவும் தான் செபிப்பதாகவும் உறுதி வழங்கினார்.

ஈக்குவதோரின் இரண்டாவது மிகப்பெரிய நகரான Guayaquilக்கு தெற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் இடம்பெற்ற நில அதிர்ச்சியில் இன்னும் பலர் இடிபாடுகளுக்கிடையில் சிக்குண்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்நில அதிர்ச்சியில் ஏறக்குறைய 16 பேர் உயிரிழந்துள்ளனர், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அடிக்கடி நில அதிர்ச்சிக்கு உள்ளாகும் ஈக்குவதோர் நாட்டில் 2016ஆம் ஆண்டின் நில அதிர்ச்சியில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதே ஞாயிற்றுக்கிழமையன்று, ஈக்குவதோர் நாட்டிற்கான செப விண்ணப்பத்திற்குப்பின், போரால் துன்புறும் உக்ரைன் நாட்டிற்காக செபிக்குமாறு மீண்டுமொருமுறை அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போரின் விளைவுகளால் தொடர்ந்து துன்புறும் உக்ரைன் மக்களுக்காக இறைவேண்டல் செய்ய மறக்கவேண்டாம் என மேலும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

புனித  யோசேப்பின் விழாவான மார்ச் 19 அன்று தந்தையர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து தந்தையர்க்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2023, 14:12