தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

எருசலேம், உலகளாவிய மதிப்பைக் கொண்டுள்ளது :திருத்தந்தை

துயருறும் குழந்தைகளின் ஒரு தாயைப்போல எருசலேம் அன்னையின் இதயமும் அமைதியின்றித் தவிக்கிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

எருசலேம் மீதான கடவுளின் இரக்கம், எந்தவொரு கருத்தியல் அல்லது அரசியல் சீரமைப்பைக் காட்டிலும் அதிக வலிமை வாய்ந்ததாக மாற வேண்டும் என்றும் அனைவரின் மரியாதைக்குரிய தாயான புனித நகரத்தின் மீது நமது அன்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 09, இவ்வியாழன்று, மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான திருப்பீடத்துறை மற்றும் பாலஸ்தீன மதங்களுக்கு இடையிலான உரையாடல் ஆணையத்தின் கூட்டுப் பணிக்குழுவின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எருசலேம் புனித நகரத்தில் இயேசு தம்முடைய படிப்பினைகளை வழங்கியதுடன் பல்வேறு அருளடையாளங்களையும் நிகழ்த்தினார் என்று உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிக முக்கியமாக, அங்கு அவர் தனது பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பின் வழியாகப் பாஸ்கா மறைபொருள் பணிகளை நிறைவு செய்ததாக  நற்செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும் எருசலேமில்தான் திருஅவை பிறந்தது என்றும்,  தூய ஆவியார் சீடர்கள் மீது இறங்கியபோது, ​​​​அன்னை மரியாவுடன் இறைவேண்டலில் ஒன்றித்து மீட்பின் செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்க அவர்களை அனுப்பினார் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேம் உலகளாவிய மதிப்பைக் கொண்டுள்ளதுடன் அனைவராலும் அமைதியின் நகராகப் பார்க்கப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

“இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா? ஆனால், இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது (காண்க லூக் 19:41-42) என்று இயேசு எருசலேம் நகரைப் பார்த்து கண்ணீர் சிந்திய நிகழ்வை எடுத்துக்காட்டி, இயேசுவின் இந்தக் கண்ணீர்த்துளிகள் ஆழ்ந்து தியானிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புச் சகோதரர் சகோதரிகளே, இன்றும் எத்தனையோ ஆண்களும் பெண்களும், யூதர்களும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், எருசலேமுக்காக கண்ணீர் சிந்திகொண்டே இருக்கிறார்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில வேளைகளில், புனித நகரத்தை நினைக்கும் போது நாமும் கண்ணீர் விடுகிறோம், ஏனென்றால், துயருறும் குழந்தைகளின் தாயைப்போல எருசலேம் அன்னையின் இதயமும் அமைதியின்றித் தவிக்கிறது என்றும் விவரித்தார்.

இப்படிப்பட்ட வேளையில், பல்மதத்தவரிடையே அமைதியை வளர்க்கும் உங்களின் பணிகள் அர்த்தமுள்ளதாக அமைய உங்களை வாழ்த்திச் செபிக்கின்றேன் என்று கூறி, அவர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2023, 13:53