தேடுதல்

'விருந்தோம்பலின் இருக்கை' மாநாட்டின் பங்கேற்பாளர்களுடன் திருத்தந்தை 'விருந்தோம்பலின் இருக்கை' மாநாட்டின் பங்கேற்பாளர்களுடன் திருத்தந்தை   (Vatican Media)

விருந்தோம்பல் என்பது அன்பின் வெளிப்பாடாகும் : திருத்தந்தை

விருந்தோம்பலை உள்ளடக்கிய சமூக மற்றும் அரசியல் கலாச்சாரம் மட்டுமே சிறந்ததொரு எதிர்காலத்தைப் பெற முடியும் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அன்பு நம்மை உலகளாவிய ஒற்றுமையை நோக்கிச் செலுத்துகிறது என்றும். அன்பிலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் வழியாக யாரும் முதிர்ச்சியடையவோ அல்லது முழுமையடையவோ முடியாது என்றும் கூறினார் திருத்தத்தை பிரான்சிஸ்.

மார்ச் 9, இவ்வியாழனன்று, 'விருந்தோம்பலின் இருக்கை' மாநாட்டின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்றியுணர்வுடன் கூடிய விருந்தோம்பலை உள்ளடக்கிய சமூக மற்றும் அரசியல் கலாச்சாரம் மட்டுமே சிறந்ததொரு எதிர்காலத்தைப் பெற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

‘அனைவரும் உடன்பிறந்தோர்’ என்று தான் எழுதிய திருமடலிலிருந்து இரண்டு பத்திகளைக் குறிப்பிட்டுக்காட்டி அவற்றில் போதிய கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூன்றாவது பிரிவில் வரும் 'அன்பின் அதிகரிக்கும் போக்கு' என்ற தலைப்பின் கீழ் அன்பு குறித்து விளக்கினார்.

அன்பு நம்மை உலகளாவிய ஒற்றுமையை நோக்கிச் செலுத்துகிறது என்றும். அன்பிலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் வழியாக யாரும் முதிர்ச்சியடைவதில்லை அல்லது முழுமையை அடைவதில்லை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை

மேலும் வலிமை வாய்ந்த இந்த அன்பானது மற்றவர்களை வரவேற்பதற்கான ஒரு திறந்த உள்ளத்தை பெறுவதற்கு நம்மை வலியுறுத்துகிறது என்றும்,  இது என்றும் நிலைத்திருக்கும் ஒன்றிப்புணர்வை நோக்கி நம்மை நடத்துகிறது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை..

"நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்" (காண்க மத் 23:8) என்று கூறும் இயேசுவின் வார்த்தைகளை எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விருந்தோம்பல் என்பது அன்பின் வெளிப்பாடாகும் என்றும் திறந்த மனப்பான்மையுடன் மற்றவர்களின் நலனில் அக்கறை செலுத்தவும், சிறந்ததைத் தேடவும் நம்மைத் தூண்டுகிறது என்றும் எடுத்துரைத்தார்.

இரண்டாவதாக, தனது திருமடலின் நான்காவது பிரிவிலிருந்து "உலகம் முழுவதற்கும் திறந்த இதயம்" என்ற தலைப்பில், சகோதரத்துவம் மற்றும் சமூக நட்பை உருவாக்க விருந்தோம்பலின் அவசியம் குறித்து விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விருந்தோம்பலை உள்ளடக்கிய சமூக மற்றும் அரசியல் கலாச்சாரம் மட்டுமே சிறந்ததொரு எதிர்காலத்தைப் பெறுவதற்கு உதவ முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2023, 14:08