தேடுதல்

வாழ்வாதாரமான நீர் வாழ்வாதாரமான நீர்   (AFP or licensors)

வாழ்வாதாரத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது தண்ணீர் : திருத்தந்தை

நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைப் பாதுகாப்பதில் எனது நெருக்கத்தையும், ஆதரவையும் வழங்குகின்றேன் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசை மாணிக்கம் - வத்திக்கான்

மனிதகுலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவும்  ஒருமித்த கருத்துகளை உருவாக்கி, ஒன்றிணைந்து செயல்படுவதில் அனைத்துலக சமுதாயத்தையும் முழுமையாக உள்ளடக்கி, நமது முயற்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 22, இப்புதனன்று நியூயார்க்கில் 'தண்ணீரும் நம்பிக்கையும்' என்ற மையக்கருத்தில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் அவையின் தண்ணீர் தொடர்பான மாநாட்டிற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைப் பாதுகாப்பதில் தனது நெருக்கத்தையும், ஆதரவையும் வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

இப்பூமியின் அவசர சவால்களைச் சந்திக்கும் விதமாக இந்த மாநாட்டில் இடம்பெறும், அமர்வுகள், கருப்பொருளை மையப்படுத்திய உரையாடல்கள் மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து செயல்பாடுகளுடன், எட்டப்பட்ட ஒப்பந்தங்களை உறுதியானதாக மாற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மார்ச் 22-ஆம் நாள் அனைத்துலக தண்ணீர் தினமாக நிறுவப்பட்டு 30 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இந்த இன்றியமையாத வளத்தை அணுகுவதற்கான தரவு, காலநிலை மாற்றத்தின் விளைவுகள், வளர்ந்து வரும் ஏற்றத்தாழ்வுகள், பிற பிரச்சினைகள் யாவும் மிகவும் கவலையும் துயரமுமானவை என்பதை  பங்கேற்பாளர்கள் அனைவரும் அறிந்துள்ள வேளை, உறுப்பு நாடுகளின் நடவடிக்கைக்கான அழைப்பு உறுதியானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தண்ணீர் மாநாடு உலகிற்குத் தேவையான தீர்வுகளை இணைக்கும் அச்சாணியாக இருக்கும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தண்ணீர் மற்றும் நலவாழ்விற்கான முழு  உத்தரவாதத்தை உறுதி செய்வதன் வழியாக, அனைவருக்குமான தண்ணீர்பெறும் உரிமையை வழங்குகின்றோம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2023, 14:19