தந்தைக் கடவுளின் இரக்கத்தை உணர்பவர்களாக...
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுள் அன்பினை முதன்மையாகக் கொண்டு, மாறிவரும் உலகில் கவனம் செலுத்தவும், கடவுளது இரக்கத்தின் இனிமையைச் சுவைப்பவர்களாக, காலத்தின் தேவைகளைப் புரிந்துகொண்டு, படைப்பாற்றலை வழங்கும் கலையில் தொடர்ந்து வளரவும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்
மார்ச் 17 வெள்ளிக்கிழமை புனித Leonardo Murialdo வை பாதுகாவலராக கொண்டு தூரினில் செயல்படும் புனித யோசேப்பு சபையினரை வத்திக்கானின் புனித கிளமெந்தினா அறையில் சந்தித்து மகிழ்ந்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1873 ஆம் ஆண்டு இத்தாலியின் தூரின் நகரில் புனித Leonardo Murialdo என்பவரால் இளையோர் பணிக்காக துவங்கப்பட்டு 150 ஆவது ஆண்டைக் கொண்டாடும் புனித யோசேப்பு சபையினரிடம் தூய ஆவியானவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது, அவர்தான் நம்மை முன்னோக்கி கொண்டு செல்கிறார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து அச்சபையினர் தம் பணிகளைச் சிறப்புடன் செய்ய வாழ்த்தினார்.
தெளிந்து தேர்தலும் நம்பிக்கையும் கொண்டு, இளையோரிடம் சிறப்பான அக்கறையுடன் செயல்பட்ட சபையின் புனிதர் போல செயல்படக் கேட்டுக் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் முன்மாதிரியைப் பின்பற்றி, உண்மையான தந்தையின் உணர்வில் செயல்பட வேண்டும் என்றும், இளையோர் பணிகளில் கனவு காண்பதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
கடவுள் அன்பிற்கு முதன்மை கொடுக்கப்படுதல், மாறிவரும் உலகில் கவனம் செலுத்துதல், தந்தைக் கடவுளின் இரக்கத்தின் இனிமையை உணர்தல் போன்றவற்றை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் அன்பின் அனுபவத்தை ஆழமாக உணர்ந்து தன்னை வலிமையானவராக, உறுதியானவராக மாற்றிய புனித லியோனார்டு போல அச்சபையினர் வாழவும் வலியுறுத்தினார்.
கடவுளால் நாம் நேசிக்கப்பட வேண்டும் என்றும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையானது அமைதி செபம் மற்றும் பிறரன்புப் பணிகளில் சிறப்பாக வளரும் என்றும், எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரன்புப் பணிகள் என்பது ஒவ்வொருவரின் அழகைப் பார்த்து வெளிப்படுவது அல்ல என்றும், இதயத்திலிருந்து மன்னித்தல், அமைதியான முகம், அன்பான குணம், மென்மை ஆகியவற்றைக் கொண்டு வெளிப்படுவது என்றும் எடுத்துரைத்தார்.
மேலும், பிறரன்புப் பணிகள் செய்ய சிலுவையை எவ்வாறு சுமக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு செபம், தியாகச்செயல்கள் முக்கியமான தேவை என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை இல்லாத ஒருவன் எவ்வாறு கடவுளை மகிழ்ச்சிப்படுத்த முடியாதோ அது போல, இனிமையான வார்த்தைகள் இல்லாமல் ஒருவன் தன் அருகில் வாழ்வோரை மகிழ்ச்சிப்படுத்த முடியாது என்றும், இவை எளிய வாழ்க்கை மற்றும் திருத்தூது வாழ்க்கைக்கான சக்திவாய்ந்த திட்டம் என்றும் கூறினார்.
இளம் தொழிலாளர்களின் எதிர்காலத்தைத் திட்டமிடவும், அவர்களின் குரல்களைக் கேட்கவும், ஒருவருக்கொருவர் உதவவும் கற்றுக் கொடுத்த புனித Leonardo Murialdo வைப் போல, இளையோர் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டு வரவும், கடவுள் மக்களின் வாழ்விலும், இறைத் துறவறத்திலும் உள்ளவர்களின் மதிப்பைப் புரிந்து வாழவும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்