லெபனோன் அரசுத்தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
லெபனோன் நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் கடினமான சமூக-பொருளாதார நிலைமை குறித்தும், நாட்டின் தற்போதைய நிலைமை பொருளாதார முடக்கத்தால் மோசமடைந்து வருவது குறித்தும் திருத்தந்தையோடு உரையாடினார் அரசுத்தலைவர் Najib Mikati.
மார்ச் 16 வியாழனன்று திருப்பீடத்தில் லெபனோன் அரசுத்தலைவர் Najib Mikati அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ்-யையும் அதன் பின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் மற்றும், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார்.
லெபனோன் குடியரசு நாடு புதிய அரசுத்தலைவரின் தேர்தலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் சூழலில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே அமைதியான சகவாழ்வு, அமைதி மற்றும் நிலைத்த தன்மைக்கு உறுதியளிக்கும் வகையிலும், அவை பலப்படுத்தப்பட வேண்டியதன் அவசியமும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், லெபனான் மற்றும் மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தையும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் இச்சந்திப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருத்தந்தை அரசுத்தலைவர் Mikati க்கு சமூக அன்பு என்ற தலைப்பில் இது ஒரு குழந்தை மற்றொரு குழந்தைக்கு உதவுவதை சித்தரிக்கும், ஒரு வெண்கலத்தால் ஆன படைப்பையும், அத்துடன் திருத்தந்தையின் ஆவணங்களின் பல தொகுதிகள், இவ்வாண்டு அமைதிக்கான செய்தியின் நகல், மனித உடன்பிறந்த உறவு பற்றிய ஆவணம் போன்றவற்றையும் பரிசாக வழங்கினார்.
அரசுத்தலைவர் Mikati திருத்தந்தைக்கு, வியாகுல அன்னையின் உருவம் பதித்த கல்லாலான புனித நீர் தாங்கும் நினைவுச் சின்னத்தையும் அளித்து மகிழ்ந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்