தேடுதல்

 Flame 2023 இளையோர்க் கூட்டம் Flame 2023 இளையோர்க் கூட்டம்  

“Flame“ இளையோர் கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி

“மரியா புறப்பட்டு.. விரைந்து சென்றார்“ என்ற விவிலிய வார்த்தைகளின் அடிப்படையில் “எழுந்திரு“ என்பது 2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக எடுக்கப்பட்டுள்ளது

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடவுளின் தாயாம் அன்னை மரியா போல இறைத்திட்டத்திற்கு விரைந்து செயல்படவேண்டும் என்றும், நீதியைப் பின்தொடர்ந்து பொதுவான நன்மைகளான, ஏழைகளுக்கு அன்பு, சமூக நட்பு போன்றவற்றின் வழியாக சாட்சியமுள்ள வாழ்வு வாழவும் வலியுருத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 4 சனிக்கிழமையன்று Wembley இல் உள்ள OVO Arena, என்னும் இடத்தில் நடைபெற்ற  இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள மிகப்பெரிய கத்தோலிக்கக் இளையோர்க்கான FLAME 2023 கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எல்லாம் வல்ல  கடவுள் இளையோர் ஒன்றாக் கூடும் இந்நேரத்தை ஆசீர்வதிப்பார் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆராதனை, இசை, சான்று, கிறிஸ்துவுடனான நட்பை ஒவ்வொருவருடன் பகிர்தல், போன்றவற்றின் வழியாக, நம்பிக்கையிலும் அன்பிலும் வலுவாக வளர்ந்து, நற்செய்திக்கு துணிவுடன் சாட்சியாக இருக்க அழைப்புவிடுத்துள்ளார்.  

காங்கோ குடியரசு  இளையோர்
காங்கோ குடியரசு இளையோர்

கடவுளின் தாயாம் மரியாவைப் போல, இறைவனின் அழைப்பிற்கு விரைந்து பதிலளித்து வாழவும், தாராள மனப்பான்மை, பணி, தூய்மை, விடாமுயற்சி, மன்னிப்பு, நமது தனிப்பட்ட தொழிலுக்கு நம்பகத்தன்மை, செபம், நீதியைப் பின்தொடர்வது, பொதுவான நன்மைகளான ஏழைகளுக்கு அன்பு, சமூக நட்பு போன்றவற்றின் வழியாக சாட்சியமுள்ள வாழ்வு வாழவும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரையும் WALSINGHAM அன்னையின் பரிந்துரையில் அர்ப்பணிப்பதாக குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இளையோர் அனைவரும் இறைவன் அளிக்கும் ஞானம், மகிழ்ச்சிம் மற்றும் அமைதியைப் பெற அவர்களுக்காக செபிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையின் சார்பாக திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திடப்பட்டு அனுப்பப்பட்ட இச்செய்தியானது, FLAME 2023 காங்கிரஸ் கூட்டத்தின் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.   

CYMFED FLAME - 2023 ஆம் ஆண்டின் கருப்பொருள்

மரியா புறப்பட்டு.. விரைந்து சென்றார் என்ற விவிலிய வார்த்தைகளின் அடிப்படையில் எழுந்திரு என்பது 2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக எடுக்கப்பட்டுள்ளது.

லிஸ்பனில் நடைபெற இருக்கும் உலக இளையோர் நாளுக்கு சரியாக 150 நாட்களுக்கு முன்பு நடந்த இந்நிகழ்வு தொற்றுநோய்க்குப் பிறகு எழுந்திருங்கள், இளம் கத்தோலிக்கர்களாக எழுந்திருங்கள், எழுங்கள் – அன்னை மரியா செய்தது போல் - நமது கத்தோலிக்க நம்பிக்கை, ஆச்சரியம் மற்றும் அழகான  செயல்களுக்காக எழுந்திருங்கள் என்ற அடிப்படையில் நடைபெற்றது.

CYMFed என்பது கத்தோலிக்க இளையோர் பேரவையை வடிவமைத்து ஆதரிக்கும் ஒரு அமைப்பாகும். CYMFed உறுப்பினர்கள் இளையோர் பேரவைக்கு, பயிற்சி மற்றும் ஆதரவை வழங்குவதற்கும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் உள்ள இளையோரின் நலனுக்காக சிறந்த நடைமுறையைப் பகிர்ந்து கொள்வதற்கும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2023, 12:50