தேடுதல்

Casa Frizzi இல்லத்தின் வரைபடம் Casa Frizzi இல்லத்தின் வரைபடம்  

CASA FRIZZI இல்லத்திறப்பு விழாவிற்கு திருத்தந்தை செய்தி

300 சதுர அடி நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள 6 இல்லங்கள், ஒவ்வொன்றிலும் 6 நபர்கள் தங்குவதற்கான இடவசதியுடன், நோயால் மிகவும் பாதிக்கப்பட்ட சிறார் தங்களது பெற்றோருடன் வாழ உருவாக்கப்பட்டுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நோயை எதிர்கொள்ளும் சிறாரின் பெற்றோர்களைப் புன்னகையுடன் வரவேற்கக்கூடிய ஓர் இல்லத்திற்கான கனவு இன்று நனவாகியுள்ளது என்றும், அந்நியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு என்ற இறைவார்த்தைகள் ஒவ்வொருவரின் இதயத்தில் எப்போதும் வாழட்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 24, வெள்ளிக்கிழமை மிலான் நகரின் Madonna delle Grazie என்னும் திருத்தலத்தின் அருகில், புற்று நோய் மற்றும் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறாரின் பெற்றோர் தங்குவதற்காகக் கட்டப்பட்டுள்ள இல்லத்தின் திறப்பு விழாவிற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மருத்துவமனைகளில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் சிறாரின்  பெற்றோர் தங்குவதற்கு வசதியாக ஒரு வீட்டைக் கட்டும் முயற்சியை ஆதரித்து ஓர் ஆண்டிற்கு முன்பு ஒரு செய்தியைத் தான் எழுதியதாக்க குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐந்தாண்டுகளுக்கு முன் காலமான மற்றும் இருபது வருடங்களாக யூனிதால்சியின் சிறந்த நண்பராக இருந்த Fabrizio Frizziக்கு இவ்வீட்டை அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்வு - மரணம் இரண்டிற்கும் இடையில் போராடிய Vittore De Carli என்பவரின் விடாமுயற்சியால் உருவான இவ்வில்லத்திற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “செபத்தின் வல்லமையினால் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு“ என்ற Vittore De Carli அவர்களின் புத்தகம் இவ்வில்லம் உருவாவதற்காக எடுக்கப்பட்ட முன்முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரமாக நோய்வாய்ப்பட்டவருக்கு சிறப்பு மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது என்றும் வீட்டிலிருந்து வெகு தொலைவில் மருத்துவமனைகள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறார் பராமரிப்பு மற்றும் மீட்புக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் பெற்றோரின் அன்பு, மென்மை மற்றும் நெருக்கம் மிகவும் முக்கியமானது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நோயை எதிர்கொள்ள வேண்டிய சிறாரைக் கொண்ட பெற்றோர்களைப் புன்னகையுடன் வரவேற்கக்கூடிய ஓர் இல்லத்திற்கான கனவு இன்று நனவாகியுள்ளது என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எபிரேயருக்கு எழுதிய திருமடலின் வார்த்தைகளான, அந்நியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு, என்பது உங்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் எப்போதும் வாழட்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிலான் நகரத்து மக்களுக்கு மிகவும் பிடித்தமான அன்னை மரியாவின்  சிறிய திருத்தலத்திற்கு அருகில் இவ்வில்லமானது திறக்கப்படுவதால், அன்னை மரியா விண்ணிலிருந்து,  நலமான வாழ்க்கைக்கானப் பரிசுகளையும், சமூகத்தின் காயங்களைக் குணப்படுத்துவதற்கான மருந்தையும் தருவார் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

300 சதுர அடி நிலப்பரப்பில் மூன்று தளங்கள் கொண்ட 6 இல்லங்கள் கொடிய நோயால் மிகவும் பாதிக்கப்பட்ட சிறார் தங்களது பெற்றோருடன் வாழ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வோர் இல்லமும் 6 நபர்கள் தங்குவதற்கான இடவசதியுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 March 2023, 12:02