தேடுதல்

அருள்பணியாளர்களுடன் திருத்தந்தை கோப்புப்படம் 2016 அருள்பணியாளர்களுடன் திருத்தந்தை கோப்புப்படம் 2016 

அருள்பணியாளர்கள் எளிய மக்களின் பணியாளர்கள்

ஆரோக்கியம், நேரம், மற்றும், மன அமைதியை அருள்பணியாளர்கள் காத்துக்கொள்ள வேண்டும். பணம் கொடுத்து யாராலும் இவைகளைப் பெற முடியாது. திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

அருள்பணியாளர் எளிய மக்களுக்கான பணியாளராக இருக்கவேண்டுமேயன்றி, நகரம்  மற்றும் ஊருக்கான தலைவராக செயல்படக் கூடாது என்றும் இயேசுவோடு இணைந்திருக்கும் போதுதான் உள்மன அமைதியை உணர்கின்றேன் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 13 திங்கள்கிழமையுடன் பத்தாண்டுகள் தலைமைத்துவப் பணியை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "Infobae" எனப்படும் அல்பேனிய வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் podcast எனப்படும் கேட்பொலிக் கோப்புக்கு அளித்த செய்தியில் அருள்பணியாளர் Guillermo Marcó என்பவரிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

தொழில்கள், அருள்பணியாளர்கள், மதமாற்றம், நாத்திகம், ஒன்றிணைந்த பயணம் ஆகியவைப் பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆரோக்கியம், நேரம், மற்றும், மன அமைதியை அருள்பணியாளர்கள் காத்துக்கொள்ள வேண்டும் என்றும், பணம் கொடுத்து யாராலும் இவைகளைப் பெற முடியாது என்றும் கூறியுள்ளார்.

பணியார்வத்தில் தனக்கென்று சுயநலத்துடன் செயல்படும் ஒருவர் தன் செயலை மோசமாக உணர்கின்றார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரம்புகள், தவறுகள், பாவங்கள் இருப்பினும் குணப்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் பிறருக்கான பணியில் ஈடுபடுபவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மற்றவர்களின் தேவைக்காக அவர்களின் பணிக்காக இயேசுவை பின்பற்ற, விரும்பிச் செல்ல வேண்டும் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சினோடல் என்னும் ஒருங்கிணைந்த பயணத்தின் தலைவர் தூய ஆவியானவர் என்றும், அவரே நமது இலக்கைக் கூர்மைப்படுத்தி அதனைச் செயல்படுத்த ஆற்றல் தருகின்றார் என்றும் கூறியுள்ளார். 

அனைவருக்கும் இணங்குதல், கருத்துகளின் சேகரிப்பு போன்றவற்றிற்கான கூட்டமல்ல   ஒன்றிணைந்த பயணம் மாறாக, அமைதி, செபம், வழிபாடு போன்றவற்றில்  தூயஆவியானவர் நுழைந்து நம் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்வதற்கான இடம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2023, 13:57