ஆலய மணியை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆலய மணியை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

புதிய ஆலய மணியை ஆசீர்வதித்துப் புனிதப்படுத்தினார் திருத்தந்தை

ஒவ்வொரு உயிரும் புனிதமானது மற்றும் மாண்புக்குரியது என்ற செய்தியை இந்த மணி எழும்பும் ஒவ்வாரு ஓசையும் உரைக்கட்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கருவானது முதல் இயற்கை மரணம் நிகழும் வரை உயிரைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டும், 'கருவிலேயே மடியும் சிசுக்களின் குரல்' என்ற ஆலய மணியை புதனன்று ஆசீர்வதித்தார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 22, இப்புதனன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்குப் புதன் பொதுமறைக்கல்வி உரை வழங்குவதற்கு முன்பு சாம்பியாவின் லுசாகா குழந்தை இயேசு பேராலயத்தில் ஒலிக்கவிருக்கும்,  ‘பிறக்காத சிசுவின் குரல்’ என்ற கோவில் மணியை ஆசீர்வதித்து புனிதப்படுத்தியபோது திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள், ஒவ்வோர் உயிரும் புனிதமானது மற்றும் மாண்புக்குரியது  என்ற செய்தியை அதன் ஒலி கொண்டு செல்லட்டும் என்று கூறினார்.

கருவறை முதல் கல்லறை வரை, மனித உயிரைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தின் அடையாளமாக, Yes to Life Foundation என்ற பிறரன்பு அமைப்பு  சாம்பியாவிற்கு நன்கொடையாக வழங்கிய, 'பிறக்காத சிசுவின் குரல்'   என்ற ஆலய மணியை ஆசீர்வதித்துப் புனிதப்படுத்துவதில் தான் மகிழ்வதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.

திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திற்கு வெளியே நிகழ்ந்த இந்தத் திருச்சடங்கில், லுசாகா பெருநகர பேராயர் Alick Banda மற்றும் Yes to Life Foundation அமைப்பின் துணைத் தலைவர் Bogdan Romaniuk ஆகியோர் கலந்து கொண்டனர்.

'கருவிலேயே மடியும் சிசுக்களின் குரல்' என்ற ஆலய மணிகள் ஏற்கனவே போலந்து, உக்ரைன் மற்றும் ஈக்வடாரில் ஒலிக்கின்றன. ஒவ்வொரு முறையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே மணியின் முதல் ஓசையை எழுப்பி துவக்கிவைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரான்ஸ், மெக்சிகோ, நிக்கராகுவா போன்ற நாடுகளும் இந்த முயற்சியில் ஆர்வமாக உள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2023, 14:14