மனிதர்களை பொருட்கள்போல் கடத்திச் செல்லும் நிலைகள் நிறுத்தப்பட
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இத்தாலியின் கலாபிரியா பகுதியில் Cutro நகர் அருகே கடலில் இடம்பெற்ற படகு விபத்தில் 16 குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 70 பேர் உயிரிழந்தது குறித்து மீண்டுமொருமுறை தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 5ஆம் தேதி தன் நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், இந்த அண்மைப் படகு விபத்துக் குறித்து மீண்டும் குறிப்பிட்ட திருத்தந்தை, மனிதர்களை பொருட்கள்போல் கடத்திச் செல்லும் இந்த நிலைகள் நிறுத்தப்படவேண்டும் எனவும், மனிதர்களை கடலில் வீசும் இந்த நிலை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.
இத்தகைய துயர்நிறை விபத்துக்களால் மத்தியதரைக்கடல் மீண்டும் இரத்தம் நிறைந்ததாக மாறவேண்டாம், நம்பிக்கையின் பயணங்கள் ஒருபோதும் மரணத்தின் பயணங்களாக மாறவேண்டாம் என அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் கலாபிரியா பகுதியில் இப்படகு விபத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு வரவேற்பு அளித்து உதவிகளை ஆற்றிய அனைவருக்கும் தன் நன்றியையும் வெளியிட்டார்.
மனித உயிர்களை கடலுக்குள் எறியும் இத்தகைய நிலைகள் இனி எப்போதும் இடம்பெற வேண்டாம் என்ற விண்ணப்பத்தையும் தன் நண்பகல் மூவேளை செபவுரையின் இறுதியில் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வளமான வாழ்வு தேடி ஏறக்குறைய 170 பேருடன் துருக்கியிலிருந்து புறப்பட்ட படகு ஒன்று பிப்ரவரி 26ஆம் தேதி இத்தாலிய கரையோரம் விபத்துக்குள்ளானதில் 16 குழந்தைகள் உட்பட 70 பேர் வரை கடலில் மூழ்கி மரணமடைந்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்