தேடுதல்

மறைக்கல்வியுரை – புனித பவுலின் நற்செய்தி அறிவிப்பு பேரார்வம்

இரக்கத்தின் இறைவன் பெயரால் சித்ரவதைகளையும் வன்முறைகளையும் நியாயப்படுத்துவதை, நற்செய்தி அறிவிப்பிற்கான பேரார்வம் ஒருபோதும் அனுமதிக்காது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, ‘நற்செய்தி அறிவிப்பிற்கான பேரார்வம், விசுவாசிகளின் அப்போஸ்தலிக்க பற்றார்வம்’ என்ற தலைப்பில் கடந்த 8 வாரங்களாக புதன் மறைக்கல்வி உரைகளில் தன் கருத்துக்களை திருப்பயணிகளுடன் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் தொடர்ச்சியாக இவ்வாரம், சான்றுபகர்ந்தோர் என்ற உபதலைப்பில், புனித பவுல் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

முதலில் புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலின் முதல் பிரிவிலிருந்து இறைவாக்குகள் 22 முதல் 24வரை வாசிக்கப்பட்டன.

ஆயினும் யூதேய நாட்டிலிருந்த கிறிஸ்தவச் சபைகளுக்கு அதுவரை அறிமுகம் ஆகாமலேயே இருந்தேன். “ஒரு காலத்தில் தங்களைத் துன்புறுத்தியவன், தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை இப்பொழுது நற்செய்தியாக அறிவிக்கிறான்” என்று மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். அதற்காக என் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள். (கலா 1,22-24)

அதன்பின் திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வுத் தொடர்ந்தது.

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர் சகோதரிகளே, அப்போஸ்தலிக்க பற்றார்வம் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் தற்போது, திருஅவை வரலாற்றில் நற்செய்தியை அறிவிப்பதற்கான பேரார்வத்திற்கும், கிறிஸ்துவின் மீதான அன்பிற்கும் பெரும் எடுத்துக்காட்டுகளாக இருந்த உன்னத ஆண் மற்றும் பெண்கள் குறித்துக் காண்போம். முதலில் புனித பவுல் குறித்துக் நோக்குவோம். சட்டத்தின் மீது மிகுந்த பற்றுக்கொண்டவராக வாழ்ந்த புனித பவுல், தமஸ்கு செல்லும் வழியில் கிறிஸ்துவைச் சந்தித்தபின், இயேசுவின் நற்செய்தியை எடுத்துரைப்பதில் பாற்றர்வம் கொண்டவராக மாறினார். பாஸ்கா மறையுண்மையில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் அன்புநிறை இரக்கத்தின் நற்செய்தியை எடுத்துரைப்பவராக மாறினார். அதாவது, சட்டத்தின் மீது பெரும்பற்று கொண்டு கிறிஸ்தவர்களை கடுமையாகத் துன்புறுத்திவந்த புனித பவுல், நற்செய்தி அறிவிப்பில் பெரும் ஆவல் கொண்டவராகச் செயல்பட்டார். மரணம் மற்றும் உயிர்ப்பின் உண்மையான அனுபவமாக இருந்த அவரின் மனமாற்றம், கிறிஸ்துவில் மறுபிறப்பு எடுக்க வைத்ததாக, புது படைப்பாக (2கொரி 5:17) அவரை மாற்றியது. மேலும், நாடுகள் முழுமைக்கும் நம் மீட்பைக் குறித்து நற்செய்தியை அறிவிக்கும் பேரார்வத்தை அவருக்குள் நிரப்பியது. மறைப்பணி ஆர்வத்தின் இதயமாக, உயிர்த்த கிறிஸ்துவுடனான நம் உயிர்துடிப்புடைய சந்திப்பு உள்ளது. நற்செய்தி அறிவிப்பிற்கான பேரார்வம் என்பது, இரக்கத்தின் இறைவன் பெயரால் சித்ரவதைகளையும் வன்முறைகளையும் நியாயப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்காது. இரக்கத்தின் இறைவனாம் ஆண்டவர், தன் மகனாம் இயேசுவின் நற்செய்தியில் நாம் நம்பிக்கைக் கொள்வதன் வழி புதிய வாழ்வு என்னும் கொடையை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பெற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறார்.

இவ்வாறு, தன் புதன் பொது மறைக்கல்வி உரையை, புனித பவுலின் நற்செய்தி அறிவிப்பு பேரார்வம் குறித்து வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் நாட்டிற்காக செபிக்குமாறு மீண்டும் ஒருமுறை அழைப்புவிடுத்து அனைவருக்கும் தன்  அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 March 2023, 11:29

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >