தேடுதல்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட Mississippi பகுதி சூறாவளியால் பாதிக்கப்பட்ட Mississippi பகுதி  (AFP or licensors)

போராலும் இயற்கைப் பேரிடர்களாலும் துன்புறுவோர்க்கு செபம்

உக்ரைன் போர், Mississippi சூறாவளிப் புயல், துருக்கி மற்றும் சிரியாவின் நிலநடுக்கம், பெரு நாட்டிற்கான அமைதி மற்றும் ஒப்புரவு ஆகியவை தொடர்பாக செபவேண்டல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இன்றைய உலகில் போரால் துன்புறும் மக்களுக்காகவும், இயற்கைப் பேரிடர்களால் அவதியுறும் மக்களுக்காகவும் தனிப்பட்ட விதத்தில் செபிக்குமாறு விண்ணப்பம் ஒன்றை விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார் 26, ஞாயிற்றுக்கிழமையன்று, புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கியபின்னர், இவ்விண்ணப்பத்தை விடுத்த திருத்தந்தை, உக்ரைனில் இடம்பெறும் போர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் Mississippiயில் இடம்பெற்ற சூறாவளிப் புயல், துருக்கி மற்றும் சிரியாவின் நிலநடுக்கம் ஆகியவைகளைக் குறிப்பிட்டதுடன், பெரு நாட்டின் அமைதி மற்றும் ஒப்புரவு முயற்சிகளைச் சுட்டிக்காட்டி, இறைவேண்டலுக்கு அழைப்புவிடுத்தார்.

மனங்களில் ஏற்படும் மாற்றமே அமைதியை நோக்கி நம்மை இட்டுச் செல்ல முடியும் என்ற திருத்தந்தை, போரால் சிதறுண்டுப் போயிருக்கும் உக்ரைன் மக்களுக்காக நாம் செபிக்க மறவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிசிசிப்பி மாநிலத்தில் பேரழிவை உருவாக்கிய சூறாவளிப்புயல் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்கள் மற்றும் உடமைகளை இழந்துள்ள மக்களுக்காக செபிக்க மறவோம் என விண்ணப்பித்தார்.

பல்வேறு அழிவுகளை உருவாக்கியுள்ள இந்த சூறாவளியில் ஏறக்குறைய 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் 50,000க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய பிப்ரவரி 6ஆம் தேதியின் நிலநடுக்கம் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியற்கை பேரிடரின் பாதிப்புக்களிலிருந்து வெளிவர முயலும் இந்நாடுகளின் மக்களை நாம் மறவாதிருப்போம் என கேட்டுக்கொண்டார்.

மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமையன்று இத்தாலியின் அனைத்துக் கோவில்களிலும், சிரியா மற்றும் துருக்கியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டப்படுவதையும் நினைவூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெரிய அளவில் துன்பங்களை அனுபவித்துவரும் பெரு நாட்டில் அமைதியும் ஒப்புரவும் இடம்பெறவேண்டும் என செபிப்பதில் தன்னோடு இணையுமாறு விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2023, 10:59