தேடுதல்

ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவையினரைச் சந்திக்கும் திருத்தந்தை ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவையினரைச் சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

போர், மோதல்களுக்கு ஒரு தீர்வாக கருதப்படக்கூடாது : திருத்தந்தை

ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவை இயல்பிலேயே ஐரோப்பாவில் உள்ள தலத்திருஅவைகளுக்கும் தொழிற்சங்க நிறுவனங்களுக்கும் இடையே ஒரு உறவுப் பாலமாக செயல்படுகிறது : திருத்தந்தை பிரியன்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இன்றைய வரலாற்றில் அமைதிக்கான பணியில் ஒன்றுபட்ட ஐரோப்பா என்ற கனவால் உயிரூட்டப்பட்ட ஆண்களும் பெண்களும் தேவை என்றும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பா அதன் வரலாற்றில் மிக நீண்ட கால அமைதியை அனுபவித்து வருகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவை ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒற்றுமையின் கனவு, அமைதியின் கனவு ஆகிய இரண்டு தலைப்புகளின் கீழ் தனது சிந்தனைகளை வழங்கியுள்ளார்.

ஒற்றுமையின் கனவு

ஐரோப்பிய ஒற்றுமை என்பது ஒரு சீரான, ஒரே மாதிரியான ஒற்றுமையாக இருக்க முடியாது என்பதை தெளிவுபடுத்துவது முக்கியமானது என்றும், ஆனால் அதேவேளையில், அது உருவாக்கும் மக்கள் மற்றும் கலாச்சாரங்களின் தனித்தன்மைகளை மதிக்கும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

ஐரோப்பாவின் வளமை என்பது, அதன் சிந்தனை மற்றும் வரலாற்று அனுபவத்தின் பல்வேறு ஆதாரங்களின் ஒருங்கிணைப்பில் உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வளமை ஒரு நதியைப் போல, அதன் கிளை நதிகளிலிருந்து வாழ்கிறது என்றும், மேலும் துணை நதிகள் வலுவிழக்கும்போதோ அல்லது தடைபடும்போதோ, முழு நதியும் பாதிக்கப்பட்டு வலிமையை இழந்துவிடும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் எச்சரித்தார்.

அமைதியின் கனவு

உக்ரைனில் நிகழ்ந்து வரும் போர் ஐரோப்பாவின் அமைதியை சிதைத்துள்ள வேளை,  அங்கிருந்து வரும் புலம்பெயர்ந்தோரை வரவேற்க அண்டை நாடுகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளன என்றும் அனைத்து ஐரோப்பிய மக்களும் உக்ரேனிய மக்களுடன் ஒன்றிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தனது மகிழ்வைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதியை ஏற்படுத்தவேண்டும் என்ற கொள்கையை அனைவரும் தெளிவாகவும் உறுதியுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், போர் மோதல்களுக்கு ஒரு தீர்வாக கருதப்படக்கூடாது, இனியும் கருதக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய ஐரோப்பிய நாடுகள் இந்த நெறிமுறை-அரசியல் கொள்கையைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் உண்மைக் கனவிலிருந்து விலகிவிட்டார்கள் என்று அர்த்தம் என்றும் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவை, இந்த அமைதியின் சவாலுக்கு மதிப்புகள் மற்றும் தொழில்முறை அடிப்படையில் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நீங்கள் இயல்பிலேயே ஐரோப்பாவில் உள்ள தலத்திருஅவைகளுக்கும்  தொழிற்சங்க நிறுவனங்களுக்கும் இடையே ஒரு பாலமாக விளங்குபவர்கள் என்றும், உறவுகள், சந்திப்புகள் மற்றும் உரையாடல்களை உருவாக்குபவர்கள் என்றும் பாராட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2023, 14:32