நற்செய்தியை அறிவித்தல் என்பது வாழ்வால் சான்றுபகர்தல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அலட்சியம் அல்ல, ஒற்றுமையுடனான உலகமயமாக்கல் இவ்வுலகிற்கு தேவை என்றும், நற்செய்தியை அறிவித்தல் என்பது, நமக்காகக் காத்திருக்கும், இரக்கமுள்ள கடவுளுக்கு நம் வாழ்வால் சான்றுபகர்வதாகும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 4 சனிக்கிழமையன்று இத்தாலிய தொலைக்காட்சியான RAIஇன் SUA IMMAGGINE அதாவது அவரது உருவில் என்னும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து மகிழ்ந்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வாழ்க்கை மற்றும் பணியின் அனுபவங்களுக்கு சாட்சியமளிக்க தங்களையே மற்றவர்களுக்காக அர்ப்பணிக்கக்கூடிய இளையோர் இருக்கிறார்கள் என்பதை தொலைக்காட்சி தொழில்நுட்ப வல்லுனர்கள் உலகிற்கு நினைவூட்டுகின்றார்கள் என்று கூறிய திருத்தந்தை, நம்பிக்கையை உயிருடன் வைத்திருக்க அனுமதிக்கும் கதைகள் வழியாக அவை வாழ்ந்த நற்செய்தியின் அழகைக் காண தொலைக்காட்சி நிகழ்வுகள் உதவுகின்றன என்றும் எடுத்துரைத்தார்.
RAI தொலைக்காட்சி மற்றும் இத்தாலிய ஆயர் பேரவையின் ஒத்துழைப்பில் உருவாகி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் SUA IMMAAGINE என்னும் நிகழ்ச்சி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடக்கும் மூவேளை செப உரையுடன் இணைந்து செல்வதாகவும், வெளியே மக்களைப் பார்ப்பதற்கு முன்பு, சில நிமிடங்கள் அந்நிகழ்ச்சியைத் தான் தொடர்ந்து பார்ப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, "அவரது உருவில் என்று இந்நிகழ்ச்சிக்கான பெயரைத் தேர்ந்தெடுத்தவரை தான் வாழ்த்த விரும்புவதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். என்ற விவிலியத்தின் இறைவார்த்தையின் அடிப்படையில் அத்தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டதை எடுத்துரைத்தார்.
நாம் கடவுளின் "சாயலில், உருவில்" படைக்கப்பட்டுள்ளோம் என்ற ஆச்சரித்தை மறக்கக் கூடாது என்றும், கடவுள் ஒவ்வொரு மனிதரிடமும் தனது ஒளியின் தீப்பொறியை தனிப்பட்ட முறையில் பற்றவைத்துள்ளார் என்றும் கூறிய திருத்தந்தை, அவரது உருவில் என்ற ஒளிபரப்பு தன் தலைப்பின் வழியாக ஒரு தனித்துவமான உறவைப் பற்றி பேசுகிறது என்றும் பாராட்டினார்.
காற்றில் உள்ள வார்த்தைகளாகவோ, திரையில் எழுதப்பட்டதாகவோ இவ்வார்த்தைகள் மாறிவிடாது, அவருடைய சாயலில், உருவில் உருவாக்கப்பட்ட கடவுளின் குழந்தைகள் நாம் என்ற விழிப்புணர்வை இழந்து வருந்தும் பலருக்கு அதைத் தொடர்ந்து சுட்டிக்காட்ட வேண்டும் புத்துயிர் பெற வைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்தி அறிவிப்புப்பாதையில் தொடர்ந்து பயணிக்க அவ்வல்லுனர்களை ஊக்குவித்த திருத்தந்தை, அலட்சியம் அல்ல, ஒற்றுமையுடனான உலகமயமாக்கல் இவ்வுலகிற்கு தேவை என்றும், நற்செய்தியை அறிவித்தல் என்பது, நமக்காகவும், நமக்கு முன்னும் பின்னும் நம்மைப் பாதுகாக்கவும், நம்மை விரும்புகின்ற, அன்பு செய்கின்ற இரக்கமுள்ள கடவுள் இருக்கிறார் என்பதற்கு நம் வாழ்வால் சான்று பகர்வதாகும் என்றும் எடுத்துரைத்தார்.
மூவேளை செபஉரை பாஸ்காகால மூவேளை செபஉரைக்குப் பின் தான் கொடுக்கும் செப விண்ணப்பங்கள் மற்றும் வேண்டுகோள்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, தொடர் செபம், பொருளாதார உதவி, உடனிருப்பு போன்றவற்றை அளிக்க தூண்டுதலாக இருக்கும் ராய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தன் நன்றியினையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்