துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அமெரிக்காவின் Nashville நகர் பள்ளியில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெறவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காகத் தொடர்ந்து செபிக்கவும் வலியுறுத்தி இரங்கல் தந்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 29 புதன் கிழமை திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் கையொப்பமிடப்பட்டு திருத்தந்தையின் சார்பாக அனுப்பப்பட்ட இவ்விரங்கல் தந்தியானது, Nashville மறைமாவட்ட ஆயர் J. Mark Spalding அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மார்ச் 27 திங்கள் கிழமை ஏற்பட்ட இந்த துப்பாக்கி சூட்டிற்கு வருத்தம் தெரிவித்தும் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனின் நிறையமைதி பெறவும் Nashville மறைமாவட்ட பேராலயத்தில் நடைபெற்ற ஆராதனை செபத்திலும், இணையதளச்செய்தியிலும் தன்னுடைய இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார் ஆயர் J. Mark Spalding.
3 சிறார் உட்பட 6 பேர் துப்பாக்கிச்சூட்டில் இறந்த செய்தியைக் கேட்டு மனம் உடைந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் அவர்களது குடும்பங்களுக்காகவும் நிகழ்வு நடந்த பிரேஸ்பீடிரியன் கிறிஸ்தவ சபை பள்ளியின் நிர்வாகத்திற்காகவும் செபிக்கக் கேட்டுக் கொண்டுள்ளார் ஆயர் Spalding.
"இந்த கொடூரமான நிகழ்வுகள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதையும், எங்கள் சொந்த நகரம் இப்படிப்பட்ட வன்முறையிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பதையும் நினைவூட்டுகிறது என்று கூறியுள்ள பள்ளியின் அதிபரும் தலைமை இயக்க அதிகாரியுமான பிரையன் கூப்பர் அவர்கள், டென்னசி முழுவதும், உள்ள பள்ளிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கின்றன என்றும், அருள்பணியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்திவருகின்றன என்றும் கூறியுள்ளார்.
பள்ளியின் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தார்க்கு பாதுகாப்பு பற்றிய கட்டாயப் பயிற்சி அளித்து வருகின்றோம் எனவும், வருடம் தோறும் நடைபெறும் பாதுகாப்பு நெறிமுறை மதிப்பாய்வுகள் பயிற்சியானது, பணியாளர்கள் மற்றும் மாணவர்களுடன் நடத்தப்படும் வழக்கமான பாதுகாப்பு பயிற்சிகளுடன் இணைந்து நடத்தப்படுகின்றது எனவும், கூறியுள்ளார் மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் முனைவர் ரெபேக்கா ஹம்மல்.
மேலும் இந்த சோகமான நிகழ்வுவானது, எங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும், காவல்துறையின் விசாரணை வழியாக சில முன்னேற்பாடு தடுப்பு நடவடிக்கைகளையும் கற்றுக் கொள்ள வழிவகுத்துள்ளது என்றும் கூறியுள்ளார் முனைவர் ரெபேக்கா ஹம்மல்.
அமெரிக்காவின் டென்னசியில் உள்ள நாஷ்வில்லி நகர் Presbyterian கிறிஸ்தவ சபை பள்ளி ஒன்றில் முன்னாள் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திங்கள்கிழமை மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பாலர் பள்ளி முதல் ஆறாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பிரஸ்பைடிரியன் கிறிஸ்தவ சபை பள்ளியானது கிரீன் ஹில்ஸ் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளது.
உயிரிழந்த 6 பேரில் மூன்று பேர் சிறார்கள், பள்ளியின் தலைவர், ஆசிரியர், பாதுகாவலர் ஆகிய மூன்று ஊழியர்கள் என்றும், மூன்று சிறார்கள், ஒன்பது வயதுடையவர்கள் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்