ஒன்றிப்பின் சக்திவாய்ந்த அனுபவமாகும் மனிதாபிமானப் பணி
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஏழைகள் குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்த மக்களுக்கு செய்யும் பணி கிறிஸ்தவ ஒன்றிப்பின் சக்திவாய்ந்த அனுபவமாகும் என்றும் மனிதாபிமானப் பணிகள், கிறிஸ்துவில் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் சகோதர சகோதரிகளுக்கு இடையிலான ஒற்றுமையின் அடையாளம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 18 சனிக்கிழமை வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் ஐரோப்பாவின் இத்தாலி, பிரான்சு, பெல்ஜியம் மற்றும் Andorra விற்கு புலம்பெயர்ந்துள்ளோர், அவரது குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு மனிதாபிமானப் பணிகளாற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனிதாபிமான முகாம்கள் சிறார், பெண்கள், ஆண்கள் மற்றும் முதியவர்களை, நிலையற்ற மற்றும் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து பாதுகாப்பாக்கின்றது என்றும், இணைப்புப் பாலங்களாக செயல்பட்டு மக்களை சட்டபூர்வமாகவும், மாண்புடனும் புலம்பெயர வழிவகை செய்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனிதாபிமான முகாம்கள் என்னும் இந்த நடைபாதைகள் எல்லைகளைக் கடந்து, துன்பம் மற்றும் தாங்க முடியாத சூழ்நிலைகளில் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் மக்களின் நம்பிக்கையை சிதைத்த அலட்சியத்தின் சுவர்களை உடைக்கின்றன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்படக்கூடிய மக்களை அடையாளம் கண்டு அவர்களை வரவேற்கும் பணி, காலத்தின் அடையாளத்திற்கு மிகவும் பொருத்தமான முறையில் பதிலளிக்க முயல்கின்றது என்றும் பாராட்டியுள்ளார்.
மனிதாபிமான முகாம்களை ஊக்கப்படுத்தும் ஆண்கள், பெண்கள், பங்கேற்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் உறுப்பினர்கள், மற்றவர்களின் தேவைகள் மற்றும் துன்பங்களில், இணைப்பாளர்களாகச் செயல்படுகின்றார்கள் என்றும், அடித்தளத்தை அமைப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், மற்றவர்களை திறம்பட வரவேற்கவும் ஒருங்கிணைக்கவும் முடியும் என்பதை தங்கள் செயல்களால் காட்டுகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புலம்பெயர்ந்தோர் தாங்கள் வாழும் நாடுகளில் இருக்கும் சட்டங்கள், மொழி, மற்றும் கலாச்சாரத்தை மதிக்கக் கற்றுக்கொண்டு ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்றும், பெற்ற விருந்தோம்பலை மற்றவர்களுக்கும் அளித்து வாழ்ந்து வரும் அவர்களின் செயல்களையும் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் பணி அமைதிக்கான உறுதியான அர்ப்பணிப்பாகும் என்றும், அமைதியை நாடுவதையும், அமைதியை எதிர்பார்த்து, அமைதிக்காக செபிப்பதையும் தான் கைவிடவில்லை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்பணிகள் முன்னோக்கி செல்லும் வழியை ஐரோப்பாவிற்கு சுட்டிக்காட்டுகிறது என்றும், நான் அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னை வரவேற்றீர்கள்” (மத் 25:35) என்ற இயேசுவின் வார்த்தைகளை சுவைத்து, ஒன்றாகவும் விடாமுயற்சியுடனும் பயணிக்க வேண்டிய நமது பாதையை நோக்கிச் செல்ல உதவுகின்றன என்றும், கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்