தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் காங்கோ குடியரசு மக்கள் கூட்டத்தினர் நடுவில் திருத்தந்தை பிரான்சிஸ் காங்கோ குடியரசு மக்கள் கூட்டத்தினர் நடுவில்   (ANSA)

மக்கள் வெள்ளத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

ஏறக்குறைய 15 இலட்சம் மக்கள் இருக்கும் அளவுக்கு பெரிய நிலப்பரப்பை உடைய இவ்விமான நிலையத்தில் திருப்பலிக்காக காத்திருந்த 10 இலட்சம் மக்களைக் காண கின்சாசாவின் பேராயருடன் திறந்தகாரில் வலம் வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பிப்ரவரி 01ஆம் தேதி புதன் கிழமை தனது 40 வது திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளில் கின்சாசா உள்ளூர் நேரம் காலை 8. 15 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம்  நண்பகல் 12.45 மணிக்கு  திருப்பலி நிறைவேற்றுவதற்காக N’dolo விமான நிலையம் நோக்கி புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 8.5 கிலோமீட்டர் தூரத்தை 25  நிமிடங்கள் கடந்த திருத்தந்தை உள்ளூர் நேரம் 8.40 மணிக்கு விமான நிலையம் வந்தடைந்தார். N'dolo விமான நிலையம் (NLO) என்பது நாட்டின் இரண்டாம் நிலை விமான நிலையமாகும், இது நகரின் வடக்குப் பகுதியில் உள்ள Barumbu நகராட்சியில் Funa ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 15 இலட்சம் மக்கள் கொள்ளளவு கொண்ட பெரிய நிலப்பரப்பை உடைய இவ்விமான நிலையத்தில் திருப்பலிக்காக காத்திருந்த 10 இலட்சம் மக்களைக் காண கின்சாசாவின் பேராயருடன் திறந்தகாரில் வலம் வந்தார். பின்னர் உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் நண்பகல் 2.00 மணிக்குத் திருப்பலியைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். நீதி மற்றும் அமைதிக்கான இத்திருப்பலியில் எண்ணற்ற மக்கள் பக்தியுடன் பங்கேற்றனர். பிரெஞ்சு மற்றும் உள்ளூர் மொழியான  lingalaவில் நடைபெற்ற திருப்பலியில் திருத்தந்தை இத்தாலியத்தில் மறையுரையாற்றினார் .

பிரெஞ்சு,tshiluba, lingala, swahili, Kikongo ஆகிய மொழிகளில் விசுவாசிகள் மன்றாட்டுக்கள் வாசிக்கப்பட்டன. திருப்பலியின் இறுதியில் கின்சாசாவின் பேராயர் கர்தினால் Fridolin Ambongo Besungu,  திருத்தந்தைக்கு தன் நன்றியினைத்தெரிவித்தார். இறுதியில் திருத்தந்தை தனது அப்போஸ்தலிக்க ஆசீரைக் கூடியிருந்த மக்களுக்கு அளித்து திருப்பலியை நிறைவு செய்தார். அதன் பின்  11.45 மணிக்கு மீண்டும் திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்த திருத்தந்தை, மதிய உணவுக்குப் பின் சற்று இளைப்பாறினார்.

திருத்தந்தையின்  டுவிட்டர் குறுஞ்செய்தி 

காங்கோ குடியரசு மற்றும் ஆப்ரிக்க மக்கள் மதிக்கப்படுதல், கேட்கப்படுதல், அவர்களுக்குரிய இடத்தைக் கண்டுபிடித்தல், கவனத்தைப் பெறுதல், போன்றவற்றிற்குத் தகுதியானவர்கள். ஆப்ரிக்காவை திணறடிப்பதை நிறுத்துங்கள். இது பறிக்கப்படுவதற்கான சுரங்கமோ அல்லது கொள்ளையடிக்கப்பட வேண்டிய நிலப்பரப்போ அல்ல. ஆப்ரிக்கா அதன் சொந்த இலக்கினை அடைவதில் முக்கியமான ஒன்றாக இருக்கட்டும்! என்றும்

பல ஆண்டுகளாக காங்கோ குடியரசின் பல இலட்சக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்திய கொடூர நிகழ்வினை நாம் மறக்கமுடியாது என்றும்,  தற்போதைய அமைதியின் செயல்முறைகளை தான் பெரிதும்  ஊக்குவிப்பதாகவும், உறுதியான செயல்களில் நிலைத்திருந்து அதற்கான அர்ப்பணிப்புகள் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, #திருத்தூதுப்பயணம் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தியினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2023, 14:27