அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் - வத்திக்கான்
மாநில இல்லம் J1 (state house j1) என்பது அரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். "ஜான் கராங்" கல்லறை, தேசிய சட்டமன்ற அலுவலகம், அடிஸ் அபாபா அமைதி ஒப்பந்தத்தின் போது மாநில அரசாங்கத்தால் 1974 - 1978ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட அமைச்சகம் போன்றவைகள் இம்மாளிகையின் அருகருகே உள்ளன. 2011ஆம் ஆண்டு தென்சூடானின் சுதந்திரத்திற்குப் பிறகு, இம்மாளிகைப் புதுப்பிக்கப்பட்டது. இம்மாளிகையின் தோட்டப்பகுதி வளாகத்தில் அரசுத்தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உள்ளூர் நேரம் மாலை 5.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 8.30 மணிக்கு அரசுத்தலைவர்களுடனான திருத்தந்தையின் சந்திப்பு நிகழ்ந்தது. அரசுத்தலைவர் Salva Kiir Mayardit திருத்தந்தையை வாழ்த்தித் தொடங்கிய உரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்தில், கேன்டர்பரி பேராயர், நாட்டில் ஏற்பட்ட போரின் பேரழிவையும் அதனால் ஏற்பட்ட துன்பங்களையும் துயரங்களையும் தான் நேரில் பார்த்ததை நினைவு கூர்ந்து எடுத்துரைத்தார். தூய ஆவி செயல்படும் இடமாக தென்சுடான் திகழ வேண்டும் என்றுதான் விரும்பி செபித்ததை எடுத்துரைத்த அவர், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பதில் நம் கைகளிலேயே உள்ளது என்பதையும் வலியுறுத்தினார். மேலும் வீரம்,துணிவு,தைரியம் கொண்டவர்கள் தென்சூடான் மக்கள் எனவும், தங்கள் சுதந்திரத்திற்காக நீண்டகாலமாக போராடி அதை வென்றெடுத்த அவர்கள், உறுதியாக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காகவும் போராடும் துணிவு கொண்டவர்கள் என்றும் எடுத்துரைத்தார்.
அவரைத்தொடர்ந்து பேசிய ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் Dr Greenshields, தாராள உள்ளம் கொண்ட, கடவுளின் அருளுடன் இயங்கும் தலத்திருவைகளும் பாதிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கையை வெளிப்படுத்தும் தலைவர்களும் நமக்குத் தேவை, என்று எடுத்துரைத்தார்.
திருத்தந்தையின் உரை
தென்சூடான் மக்களின் வாழ்க்கையை செழிப்பு மற்றும் அமைதிக்கான தூய ஆதாரங்களாக புதுப்பிக்க ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களுக்கு தேவை தலைவர்கள் அல்ல தந்தையுள்ளம், கொண்டவர்கள் என்றும், சரிவுகளை அல்ல நிலையான வளர்ச்சியே அவர்களுக்குத் தேவை என்றும், வலிமிகுந்த குழந்தைப் பருவம், அமைதியான முதிர்ச்சிக்கு வழிவகுக்கும்" என்றும் எடுத்துரைத்தார். மக்களுக்காக பணி செய்ய அழைக்கப்பட்டுள்ள தலைவர்கள் மக்களின் நலனுக்காக உழைத்தால், அம்மக்களால், வரலாற்றில் நினைவு கூரப்படுவார்கள் என்றும் நினைவூட்டினார்
அரசுத்தலைவர்களை சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் நேரம் மாலை 5.45 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.15 மணிக்கு 2கிமீட்டர் தொலைவில் உள்ள தென்சூடான் திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார். திருப்பீடத்தூதரகத்தாரால் சிறப்பாக தனிப்பட்ட முறையில் வரவேற்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது இரவு உணவை உண்டு நித்திரைக்குச் சென்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்