நீண்டகால காத்திருப்பு நிஜமாகிய தருணம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருத்தந்தையின் நீண்டகால காத்திருப்பு நிஜமாகிய தருணமாக தென்சூடான் பயணம் அமைந்துள்ளது. ஆப்ரிக்க நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 3 வெள்ளிக்கிழமை ஜூபா உள்ளூர் நேரம் 2.45 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் மாலை 6.15 மணிக்கு தென்சூடானின் ஜூபா பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்தார்.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட தென்சூடான் திருத்தூதுப் பயணம் திருத்தந்தையின் முழங்கால் வலியின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. திருத்தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரொ பரோலின் தென்சூடான் பகுதிகளைக் கடந்த ஆண்டுப் பார்வையிட்டார். தென்சூடான் பற்றிய தனது அனுபவங்களைத் திருத்தந்தையிடம் பகிர்ந்தார்.
தென்சூடானுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்ணம், ஆசை, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி நிறைவேறியது. தனது தலைமைத்துவப் பணிக்காலத்தில் 5 முறை ஆப்ரிக்க நாட்டின் பகுதிகளுக்கு திருப்பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென்சூடானுக்கு வருவது இதுவே முதல் முறை. அதுமட்டுமல்ல தென்சூடானுக்கு வருகை தந்த முதல் திருத்தந்தையும் இவரே ஆவார்.
வறுமை, உள்நாட்டு நல்லிணக்கத்தின் சமநிலையைக் கண்டறிதல், நாடு, நகரம் ஆகியவற்றின் திறந்த காயங்களுக்கு மருந்தாகவும் புதிய தொடக்கத்திற்கு காரணமாகவும் திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் இருக்கும் என்று தென்சூடான் மக்கள் கருதுகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்