தேடுதல்

காங்கோ குடியரசு திருத்தூதுப் பயணம் இரண்டாம் நாள்

அமைதிக்கான திருப்பயணமாக காங்கோ குடியரசு மற்றும் தென் சூடான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி, 01 ஆம் தேதி புதன் மாலையில் காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களுக்குத் தொண்டுப் பணிகளாற்றும் குழுக்களையும் சந்தித்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

வாழ்க்கை என்பது ஒரு முறை. வாழ்வில் கொள்வோம் நல்நெறிமுறை. வேண்டவே வேண்டாம் வன்முறை என்று வன்முறையினைத் தவிர்க்க அறிவுறுத்துகின்றனர் இக்கால கவிஞர்கள். வன்முறையை கைவிட்டு அமைதிவாழ்வை மேற்கொள்ளுங்கள் என்று பலமுறை அறைகூவல் விடுத்து, அதை இன்னும் அதிகமாக வலியுறுத்த கான்கோ குடியரசுக்கு அமைதிக்கான திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இரண்டாம் நாள் பயண நிகழ்வுகள்.

வன்முறை என்பது ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம், மரணம், உளவியல்தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாகவோ அல்லது இவை நிகழ அதிகமான வாய்ப்புகளை உருவாக்கும்படியாகவோ, உண்மையாகவோ அல்லது பயமுறுத்தும்படியாகவோ உடல் வலிமை மற்றும், அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவதாகும்.  வன்முறைகளை அரசியல், மதம், சாதி, குடும்பம், பாலியல் சார்ந்தவகைகளாக வகைப்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு வரையறை செய்துள்ளது.

நாட்டின் அமைதிக்கு இடையுறு விளைவித்து மிகவும் கொடூரமான துன்பங்களைக் கொடுத்த வன்முறையாளர்களால் அதிகமாக பாதிக்கப்பட்ட காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள மக்களை திருப்பீடத்தூதரகத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் செபத்தில்
வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் செபத்தில்

பிப்ரவரி 01 ஆ, தேதி மாலை கின்சாசா உள்ளூர் நேரம் மாலை 4.30 அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.00 மணிக்கு கின்சாசா திருப்பீடத் தூதரகத்தில் கிழக்குப்பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கை அனுபவங்களுக்கு செவிமடுத்தார். உள்ளூர் தலத்திருஅவைகளின் உதவியுடன் மீண்டும் தங்களது வாழ்வை  வாழத் தொடங்கியிருக்கும் சிறார், பெண்கள் மற்றும் இளையோர் தங்களது வாழ்க்கையில் நடந்த மிகவும் கொடூரமான நிகழ்வுகளை திருத்தந்தையிடம் பகிர்ந்து கொண்டனர். மிகவும் கொடூரமான மற்றும் கற்பனை செய்ய முடியாத வன்முறையின் சாட்சியங்களான அவர்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்த அவர்கள் அனைவரும், நாங்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறோம், எங்கள் நாட்டில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக துன்புறுத்துபவர்களை மன்னிக்கவும், உடன்பிறந்த உறவு மற்றும் நல்லிணக்க உணர்வில் வாழவும் உறுதியளிக்கின்றொம் என்று கூறிய வார்த்தைகள கேட்போர் உள்ளத்தை நெகிழச் செய்தது.

பல்வேறு ஆயுதக்குழுக்களின் கைகளில் முடிவில்லாத வன்முறையால் பேரழிவிற்கு உள்ளான காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புட்டெம்போ-பெனி, கோமா, புனியா, புகாவு மற்றும் உவிரா ஆகிய இடங்களிலிருந்து ஏராளமான மக்கள் திருத்தந்தையை சந்திக்க வந்திருந்தனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட அவர்களில் 4 பேர் மட்டும் கின்ஷாசாவில் உள்ள திருப்பீடத்தூதரகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னிலையில்  தங்கள் சாட்சியத்தை வழங்கி தங்களது துன்பத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களான கத்தி அரிவாள், ஈட்டி பாய் என்பன போன்றவற்றை திருச்சிலுவையின் முன் அர்ப்பணித்து செபித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2023, 14:29