தேடுதல்

 வழிபாட்டில் பங்கேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் வழிபாட்டில் பங்கேற்ற திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

அர்ப்பணிக்கப்பட்ட மக்களுக்கான உலக நாள் வழிபாட்டில் திருத்தந்தை

அர்ப்பணிக்கப்பட்ட துறவிகளின் உலக நாளை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1997ஆம் ஆண்டில் உருவாக்கினார்

மெரினா ராஜ் - வத்திக்கான்

அழைக்கப்பட்டோர் பலர் தேர்ந்தெடுக்கப் பட்டோர் சிலர். அவ்வகையில் அன்பர் இயேசுவின் மேல் கொண்ட அன்பால் ஈர்க்கப்பட்டு அனைத்தையும் துறந்தவர்கள் தான் துறவிகள். இறைவனிடமிருந்து கொடையாகப் பெற்ற வாழ்வை இறைவனுக்காகவும் இறைப்பணிக்காகவும் அர்ப்பணித்ததால் அர்ப்பணமானவர்கள், அர்ப்பணிக்கப்பட்டவர்கள். கடவுளின் மகனாகப் பிறந்த இயேசுவை அந்த கடவுளுக்கே காணிக்கையாக கையளித்த நாளில் இவ்வர்ப்பணிக்கப்பட்ட மக்களுக்கான நாள் கொண்டாடப்படுவது சாலச்சிறந்தது என்று கருதி, அர்ப்பணிக்கப்பட்ட துறவிகளின் உலக நாளை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1997ஆம் ஆண்டில் உருவாக்கினார்.  இயேசு பிறந்த நாற்பதாம் நாளான, பிப்ரவரி 2ம் தேதியன்று, ஒவ்வோர் ஆண்டும், இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவாகவும், அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் நாளாகவும் திருஅவை  சிறப்பித்து மகிழ்கின்றது.  

அவ்வகையில் பிப்ரவரி 2ஆம் தேதி வியாழன் தனது 40ஆவது திருத்தூதுப் பயணத்திற்காக காங்கோ குடியரசில் இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கின்சாசா வில் உள்ள Notre-Dame du Congo என்னும் பேராலயத்தில் காங்கோ குடியரசில் உள்ள அருள்பணியாளர்கள் அருள்சகோதரிகள் திருத்தொண்டர்கள் மற்றும் அருள்பணித்துவ மாணவர்களுடனான வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டார்

வழிபாட்டில் பங்கேற்ற துறவிகள்
வழிபாட்டில் பங்கேற்ற துறவிகள்

ஏறக்குறைய 5000க்கும் அதிகமான அர்ப்பணிக்கப்பட்டவர்கள் கின்சாசா பேராலயத்தின் உள்ளேயும் வெளியேயும் நிறைந்து இருக்க இவ்வழிபாட்டு நிகழ்வானது இன்சாசா பேராயர் கர்தினால் ஃப்ரிடோலின் அம்போங்கோ திருத்தந்தையை வரவேற்று  வாழ்த்தியதோடு தொடங்கியது. பேராயர் தனது உரையில் காயம்பட்ட காங்கோ குடியரசு தலத்திருஅவை, நாட்டின் காயங்களுக்காக  திருத்தந்தையின் ஆன்மீக உதவியை நாடுவதாகவும், நாட்டில் நற்செய்தி அறிவிப்பு பெரும்பாலும் ஆபத்தான சூழ்நிலையில் நடைபெறுவதாகவும்,  இத்தகைய சூழ்நிலையில் இந்நாட்டிற்கு அமைதியின் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டிருக்கும் திருத்தந்தைக்கு தன் நன்றியினை தெரிவிப்பதாகவும் எடுத்துரைத்தார்.

அவரைத்தொடர்ந்து அருள்பணியாளார், அருள்சகோதரி, திருத்தொண்டர் ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அருள்பணியாளார் பகிர்கையில் ஊழல் மற்றும் தன்னிச்சையான தண்டனைகளில் மூழ்கும் உலகில் நீதிக்கு சாட்சிகளாக இருப்பதன் சவாலைப் பற்றியும், அருள்சகோதரி தனது பகிர்வில்  நாட்டின் நலனுக்காக தியாகங்கள் பல செய்து காயம்பட்ட மக்களின் காயங்களைக் குணப்படுத்த வந்த நல்ல சமாரியன் போல திருத்தந்தையைப் பார்ப்பதாகவும் எடுத்துரைத்தார். அவரைத் தொடர்ந்து திருத்தொண்டர் ஒருவர்,  தலத்திருஅவைகள் புத்துயிர் பெற்று உருவாக ஏற்படக்கூடிய துன்பங்களையும் இடையுறுகளையும் நினைவுகூர்ந்தார். அதனைத்தொடர்ந்து திருத்தந்தை அர்ப்பணிக்கப்பட்ட மக்களுக்கான தன் உரையைத் துவக்கினார்

அன்புப்பணி செய்ய ஆண்டவனிடமிருந்து வரும் அற்புத வாய்ப்பு அழைப்பு. ஒவ்வொருவரின் அழைப்பும் ஒராயிரம் அர்த்தம் சொல்லும் அவ்வகையில் நமது அழைப்பு மிக முக்கியமானது என்றும் நாம் அனைவரும் இறைவனுக்கு மிக முக்கியமானவர்கள் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை திருஅவைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மக்களின் பணி மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது என்றும் வலியுறுத்தி தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2023, 14:13