கடவுளுடைய மக்களின், ஒற்றுமைப் பிணைப்பு மரியா
மெரினா ராஜ் – வத்திக்கான்
மறைநூல், மற்றும் அப்போஸ்தலிக்க பாரம்பரியம் கொண்டு திருத்தூதர்களை செபச்சூழலில் அணைத்து காத்த இயேசுவின் தாயாம் அன்னை மரியா இன்று நம்மையும் எளிய வழியில் அழைத்து கடவுளுடைய மக்களாகிய நமது ஒற்றுமையின் பிணைப்பாக செயல்படுகின்றார் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 13 திங்கள் கிழமை மெக்சிகோ மற்றும் ஸ்பெயினில் உள்ள இரண்டு திருத்தலங்கள் புனித குவாதலுபே அன்னை மரியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டு இணைக்கப்பட்டதற்கு மகிழ்வைத் தெரிவித்து Toledo பேராயர் Francisco Cerro Chaves, அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைவருக்கும் எப்போதும் திறந்திருக்கும் கதவுகள் கொண்ட இல்லமாக, செபம், மற்றும் ஒற்றுமையின் இல்லமாக ஒவ்வொரு ஆலயங்களும் செயல்படவேண்டும் என்று அச்செய்தியில் அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிராச்ன்சிஸ் அவர்கள், கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் புளிக்கரமாக இருக்க வேண்டும் என்று சவால் விடுக்கும் கன்னி மரியா இந்நோக்கத்திற்காகவே திருத்தலத்திற்கு வரும் மக்களை ஊக்குவிக்கிறார் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
"எல்லாவற்றையும் புதியதாக்கி, உலகத்தை ஒன்றிணைத்த கடவுளின் மகன் மீது தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அறிவிக்க, அவரது மேய்ப்பர்களாக அழைக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வருபவர்கள் என்றும் உண்மையான தாயாம் அன்னை மரியா "கடவுளை ஆவியிலும் உண்மையிலும் வணங்க, நிலையான வாழ்விற்கான வாழ்வு தரும் நீரை ஒவ்வொருவரின் இதயங்களிலும் கொண்டு வர உதவுவதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
"ஒவ்வொரு வரலாற்று தருணம், கலாச்சாரம், நற்செய்தி என அனைத்தும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் போது, அதன் அர்த்தத்தில் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது" என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "நிராகரிப்பதற்குப் பதிலாக, அதை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு முறையும், அன்னை மரியா நம்மை அழைத்து, ஆவியால் மட்டுமே முடியும் அந்த நெருக்கமான ஒற்றுமைக்கு நம்மை சாட்சியாக, கடவுளின் கைவினைஞர்களாக இருக்க அழைக்கின்றார் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
மெக்சிகோவில் அதிக திருப்பயணிகளின் வருகையைக் கொண்ட புனித குவாதலுபே அன்னை திருத்தலமானது Extremadura பகுதியில் உள்ள Sierra de las Villuercas அடியில் அமைந்துள்ள ஸ்பெயின் நகர குவாதலுபே அன்னை மரியா திருத்தலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
714 ஆம் ஆண்டில் மூரிஷ் படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டு, உள்ளூர் மக்களால் வணங்கப்பட்டு வரும் கன்னிமரியாவின் திருஉருவச்சிலை ஆடுமேய்க்கும் ஒருவரால் குவாதலூபே ஆற்றின் கரையில், கண்டுபிடிக்கப்பட்டது. அச்சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே அன்னை மரியாவிற்கு ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டு, குவாதலூபே அன்னை திருத்தலம் என்றழைக்கப்பட்டு வருகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்