தேடுதல்

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் முதியவர் ஒருவர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் முதியவர் ஒருவர்.  (ANSA)

நிலநடுக்கங்களால் துயருறும் மக்களை நினைவுகூர்வோம் : திருத்தந்தை

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கங்கள் ஏற்படுத்திய பேரழிவால் துயருறும் மக்களை மறக்கவேண்டாம் : திருத்தந்தை பிரான்சிஸ்

 

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கங்களால்  பாதிக்கப்பட்டு துயருறும் மக்களை மறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பிறரன்பு பணிக்கான திருப்பீட அமைப்பு வழியாக உதவிப்பொருள்கள் அனுப்பியுள்ள வேளை, இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 6 ஆம் தேதி சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் நிகழ்ந்த பேரழிவைத் தொடர்ந்து, அதில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைப் போக்க நெருக்கமான மற்றும் உறுதியான ஆதரவை வழங்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட ஒன்பது நாள்களுக்குப் பிறகு, அங்குத் தொடர்ந்து அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை தற்போது 41,000-ஐ  கடந்துள்ள வேளை, இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.

பிப்ரவரி 12, இஞ்ஞாயிறன்று, தனது மூவேளை செபியுரையின்போது துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கங்களால் துயருறும் மக்களுக்கு உதவுங்கள் என்று திருப்பயணிகளிடம் விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதனை செயலில் காட்டும் விதமாகத் தற்போது இந்த மனிதாபிமான உதவிகளை அந்நாடுகளுக்கு அனுப்பியுள்ளார்.  

மேலும், இத்தாலிய அரசு மற்றும் பிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், கப்பலில் 10,000 கம்பளி ஆடைகள் உள்ளன, அவை திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பாளரான கர்தினால் Konrad Krajewski அவர்களால் வழங்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2023, 14:17