தேடுதல்

இஸ்ரயேல் இராணுவ வீரர்கள் இஸ்ரயேல் இராணுவ வீரர்கள்   (ANSA)

வன்முறைகள் ஒழிய ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்யுங்கள்

திருத்தந்தை: அனைத்துலக நாடுகளின் உதவியோடு இஸ்ராயேலும் பாலஸ்தீனமும் அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்வின் பாதையைக் கண்டுகொள்ள செபிக்கிறேன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புனித பூமி மற்றும் புர்கினா ­பாஸோ நாடுகளில் இடம்பெறும் வன்முறைகளால் எண்ணற்றோர் உயிரிழந்து வருவது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, அமைதிக்கான செபத்திற்கு அனைவரிடமும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கிய நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் இவ்வழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகள் உட்பட எண்ணற்றோர் கொல்லப்படும் செய்திகள் புனித பூமியாம் யெருசலேமில் இருந்து வந்துகொண்டிருக்கும் நிலையில், இத்தகைய வன்முறைகளின் தொடர்ச்சியை எவ்வாறு நாம் நிறுத்தப் போகிறோம் என்ற கேள்வியை முன்வைத்தார். 

பகைமை மற்றும் பழிவாங்கும் உணர்வுகளை பேச்சுவார்த்தைகளின் வழி வெற்றிகொள்வோம் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்துலக நாடுகளின் உதவியோடு இஸ்ராயேலும் பாலஸ்தீனமும் அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்வின் பாதையைக் கண்டுகொள்ள தான் இறைவேண்டல் செய்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் புர்கினா பாஸோ நாடு குறித்த தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குடியாட்சி, நீதி மற்றும் அமைதி நோக்கிய பாதையில் நடைபோடும் புர்கினா பாஸோ மக்கள், நம்பிக்கையிழக்காமல் செயல்பட செபிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரஷ்ய ஆக்ரமிப்பை ஓராண்டாக அனுபவித்துவரும் உக்ரைன், பூமி அதிர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் சிரியா மற்றும் துருக்கி ஆகியவைகளுக்காக செபிக்க மறக்க வேண்டாம் என தன் மூவேளை செப உரையின் இறுதியில் மேலும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 பிப்ரவரி 2023, 14:24