தேடுதல்

மருத்துவ நலப்பணியாளர்களின் பிரதிநிதிகளை சந்திக்கும் திருத்தந்தை மருத்துவ நலப்பணியாளர்களின் பிரதிநிதிகளை சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

பரிவிரக்கம் கொண்ட நல்ல சமாரியரின் இதயத்தைக் கொண்டிருப்போம்

இறைவேண்டலிலும், பரிவிரக்கத்திலும் நம்மை ஒன்றிணைக்கும் இதயங்களைப் பெறுவோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நாம் ஒன்றிணைந்து பயணிக்கும்போது, நம் அனைவருக்கும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ள அப்பயணம் உதவுகிறது என்றும், அதுவே உண்மையான அன்பு என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 9, இவ்வியாழனன்று, உரோமை மறைமாவட்டத்தின் மருத்துவ நலப்பணியாளர்களின் பிரதிநிதிகளைப் திருபீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக நோயாளர் தினத்தில் நாம் சந்திக்கின்றோம் என்றும், இவ்வாண்டு ஒருங்கிணைந்த பயணத்தின் பின்னணியில், ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்' (லூக் 10:35) என்ற நற்செய்தியின் வார்த்தையை இத்தினம் கருப்பொருளாகக் கொண்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார்.

லூக்கா நற்செய்தியில் வரும் நல்ல சமாரியார் உவமையை மையமாகக் கொண்டு மூன்று தலைப்புகளின் கீழ் தனது சிந்தனைகளை பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நோயால் துன்புறுவோருடன் உடனிருப்பது

செவிமடுட்ப்பது, அன்பு செய்வது, ஏற்றுக்கொள்வது என்று மூன்று பண்புகளை இது உள்ளடக்கியிருக்கிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆனால் இதைச் செய்ய, நம் சகோதரரின் வலியை நாம் உணர்ந்துகொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், ஆனால் இது அவ்வளது எளிதான காரியம் அல்ல, இதை செய்வதற்கு நமது இதயத்தின் எண்ணங்கள் அனுமதிக்காது என்றும் இதில் நாம் வெற்றி பெற முயற்சிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

கேட்கப்படாத துயரங்களைக் கேட்பது

நோயாளர்களில் பலர் நோயின்போது தனியாக விடப்பட்டு, நிதி மற்றும் தார்மீக ஆதரவு இல்லாமல், எளிதில் விரக்தி மற்றும் நம்பிக்கை இழப்புக்கு ஆளாகிறார்கள் என்றும் ஃபைப்ரோமியால்ஜியா மற்றும் நீண்டநாள் வலி உள்ளவர்களுக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வலியில் இருக்கும் நோயாளர்களின் அழுகை முதலில் கேட்கப்படுவதை நாம் உறுதி செய்வோம் என்றும் கூறினார்.

பணிகள் பரவலாக்கப்பட வேண்டும்

இதனை நாம் வலைப்பின்னல் என்றும் அழைக்கலாம். இது, நம்மைச் சுற்றி உறவு என்ற ஒரு 'வலை' வளர செய்கிறது, ஆனால் இது மனித கைகளால் கட்டப்பட்ட வலை, இது ஒன்றிணைந்து பணியாற்றுவதையும்,  இறைவேண்டல் மற்றும் இரக்கத்தில் இதயங்கள் ஒன்றிணைக்கப்படுவதையும் எடுத்துக்காட்டுகிறது என்று விவரித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேலும் இந்த வலைப்பின்னல் என்பது புனித பவுலடியார் கூறும்  'உடல் ஒன்று உறுப்புகள் பல' ( காண்க 1கொரி. 12:12-27) என்ற உவமையை ஒத்திருக்கின்றது என்றும் எடுத்துக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2023, 14:33