திருஅவை என்பது ஒரு கள மருத்துவமனை : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தன்னைப் பொறுத்தவரை, திருஅவை என்பது ஒரு கள மருத்துவமனை என்றும் கவனிப்பு, குணப்படுத்துதல் மற்றும் வாழ்க்கைக்கான பணியாற்றுவதற்கே அது அழைப்பைப் பெற்றுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 2, வியாழனன்று, தனது காங்கோ திருத்தூதுப் பயணத்தின்போது அதன் தலைநகர் கின்ஷாஷாவில் நிகழ்ந்த இயேசு சபை அருள்பணியாளர்களின் சந்திப்பின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை என்பது மக்கள் காயமடையும் இடத்திற்குச் செல்லும் மருத்துவமனையாக இருக்க வேண்டும். ஆனால், அது ஒரு பன்னாட்டு ஆன்மீக நிறுவனமாக இருக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.
இயேசு சபை தனது பணிகளைத் திருஅவையிடமிருந்தே பெறுகின்றது, தற்போதைய சூழலில் தாங்கள் எம்மாதிரியான பணியை இச்சபைக்கு வழங்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு சபை உருவாக்கிய உலகளாவிய அப்போஸ்தலிக்க விருப்பத் தேர்வுகளுடன் தான் உடன்படுவதாகவும், ஆன்மிகப் பயிற்சிகள் மற்றும், தெளிந்துதேர்தல் வழியாக கடவுளுக்கான வழியைக் காண்பிப்பதில் அவை முதன்மையாக உள்ளன என்றும் எடுத்துரைத்தார்.
இரண்டாவதாக, இயேசு சபை ஆற்றவேண்டியது நல்லிணக்கம் மற்றும் நீதிக்கான பணி என்றும், இத்தகைய பணி என்பது ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் மனித மாண்பு சிதைக்கப்பட்டவர்களுடன் இணைந்து நடக்க வேண்டும் என்பதை காட்டுவதாகவும், மூன்றாவதாக, இளையோர் தங்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் நாம் அவர்களுடன் இணைத்து செல்ல வேண்டும் எனவும், Laudato si' இன் உணர்வில் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதில் ஒத்துழைப்பு நல்கிடவேண்டும் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உங்களின் ஆன்ம ஆறுதல் மற்றும் வறட்சி எதுவாக இருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைநம்பிக்கைகொண்ட எளிய மக்களைப் பார்க்கும்போது தனக்கு மன ஆறுதல் கிடைக்கிறது என்றும் மறுபுறம், உயரதிகாரிகளும், பாவியரும், இறைநம்பிக்கையற்றவர்களும் தன்னைப் பாழாக்குவது தனக்கு ஆன்ம வறட்சியை அளிக்கிறது என்றும், அருள்பணியாளர்கள் மக்களின் நல்மேய்ப்பர்களாக சிறந்து விளங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் 2025-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற யூபிலி விழா, ஒரு இயேசு சபை ஆயராக, கர்தினாலாக, திருத்தத்தையாக அவரின் பணிகள், பணித் துறப்பு மற்றும், இயேசு சபை ஆயர்களிடமிருந்து அவரது எதிர்பார்ப்புகள் போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்