ஆயுதங்களை களைந்துவிட்டு இரக்கத்தைத் தழுவுங்கள் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 1, இப்புதனன்று காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவிலுள்ள Ndolo விமானத்தள திறந்தவெளி அரங்கில் நிகழ்ந்த திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய மறையுரை.
இயேசுவில் அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, துயரத்திலும் அச்சத்தின் பிடியிலும் இருந்த சீடர்கள் உயிர்த்த ஆண்டவரைக் கண்டதும் நிறைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்று யோவான் நற்செய்தி கூறுகிறது. மகிழ்வும் வியப்பும் நிறைந்த அந்தத் தருணத்தில் 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக' என்ற எளிய வார்த்தைகளை கூறி சீடர்களைத் தேற்றினார் இயேசு.
நாம் கொண்டாடும் ஒவ்வொரு திருப்பலியிலும் நமதாண்டவர் இயேசு நமக்கும் அதே அமைதியை அருள்கின்றார். காரணம், இயேசு முதலில் நமது எதிரிகளாகிய பாவத்தையும் சாவையும் வென்ற பிறகே இறைத்தந்தையோடு இவ்வுலகத்தை ஒப்புரவாக்கவேண்டி இருந்தது. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே இருந்த இடைவெளியை அகற்றிய பிறகு இயேசு இந்த அமைதியைத் தனது சீடர்களுக்கு வழங்குகின்றார்.
சீடர்கள் குற்ற உணர்வும், விரக்தியும், துயரமும், பயமும் கொண்டிருந்தனர். இருப்பினும், மிகவும் மனம் உடைந்துபோயிருந்த அவர்களுக்கு அமைதியை கொடுக்கின்றார். அவர்கள் மரணத்தின் பயத்தால் சூழப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்குப் புதிய வாழ்வை அறிவிக்கின்றார். இவ்வாறு நாம் துயரத்தின் பிடியில் சிக்கித்தவிக்கும்போதும், மனமுடைந்த நிலையில் இருக்கும்போதும், துயரத்தின் பாரத்தால் கீழே விழ முற்படும்போதும், இயேசு நம்மைத் தாங்கிக்கொள்கின்றார். சகோதரர் சகோதரிகளே, தீமையால் இயேசுவை ஒருபோதும் வெல்ல முடியாது. தீமை இறுதிவரை நிலைத்திருக்கவும் முடியாது.
இயேசு நமக்கு வழங்கிய இந்த அமைதியை நமக்கே சொந்தமாக்கிக்கொள்ளவும், அதனை உலகுக்கு அறிவிக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். இந்த அமைதியை உருவாக்கி வளர்த்தெடுத்து அதனை எப்படி அறிவிப்பது, பாதுகாப்பது என்பது குறித்து இயேசுவே மூன்று விதமான வழிமுறைகளை நமக்கு வழங்குகின்றார்.
மன்னிப்பு
மக்களின் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு தனது சீடர்களுக்கு வழங்குவதற்கு முன்பு அவர்களை முதலில் மன்னித்தார். வார்தையால் மட்டுமல்ல செயலாலும் அதனைக் காட்டினார். அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார் என்று நற்செய்தி கூறுகிறது. இயேசு தனது சீடர்களிடம் தனது காயங்களை காட்டினார். ஏனென்றால் மன்னிப்பு காயங்களிலிருந்தே பிறக்கிறது. நமது காயங்கள் வெறுப்பின் வடுக்களை விட்டுச் செல்லாமல், பிறருக்கு இடமளித்து அவர்களின் பலவீனங்களை ஏற்றுக்கொள்ளும் வழிமுறையாக மாறும்போது மன்னிப்புப் பிறக்கிறது. நமது பலவீனம் அதற்கான ஒரு வாய்ப்பாகிறது, மன்னிப்பு அமைதிக்கான பாதையாகிறது.
இயேசு வார்த்தைகளை அதிகம் பேசுவதில்லை, ஆனால், அவர் நம்மீது கொண்ட பேரன்பால் காயப்பட்டவர் என்பதை எடுத்துக்காட்டுவதற்கு தனது இதயத்தை விரித்துக் காட்டுகிறார். நாம் எப்போதும் மன்னிக்கப்படுவதற்கான வாய்ப்பை இயேசு வழங்கிக்கொண்டே இருக்கிறார். அவர் தன்னுடைய மன்னிப்பினால் நம்மை அருள்பொழிவு செய்ய விரும்புகின்றார் என்பதை உணர்வோம். ‘ஆயுதங்களைக் களைந்துவிட்டு, இரக்கத்தைத் தழுவுங்கள்’ என்று கூறும் நமதாண்டவர் இயேசு, இந்த மக்களில் காயமடைந்த மற்றும் ஒடுக்கப்பட்ட அனைவருக்கும், கூறுவது, : "உங்கள் காயங்களை என்னுடைய காயங்களில் புதைக்க அஞ்ச வேண்டாம் என்பதே.
குழுமம்
உயிர்த்த இயேசு தம் சீடர்களில் ஒருவரிடம் மட்டும் தோன்றி பேசவில்லை, மாறாக, அவர்களை ஒரு குழுமமாகச் சந்திக்கின்றார். இந்த முதல் கிறிஸ்தவக் குழுமத்தின்மீது அவர் தனது அமைதியை வழங்குகிறார். குழுமம் இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை, அதுபோலவே சகோதரத்துவம் இல்லாமல் அமைதி இல்லை. அமைதியை அருளும் கொடையாக துணையாளராம் தூய ஆவியாரை இயேசு நமக்குத் தருகின்றார். பிரிந்ததை இணைப்பவராக இருக்கும் தூய ஆவியாருக்காக நன்றி கூறுவோம்.
உலகத்தின் ஆசைகளைத் தூண்டும் தீய ஆவியிலிருந்து நம்மை விடுவிக்க நம் அனைவருக்கும் கடவுளின் தூய ஆவியானவர் தேவை. குழும வாழ்வில் நம்பிக்கை வைப்போம், கடவுளின் உதவியோடு, உலக ஆசைகளைத் தூண்டும் தீய ஆவியை விடுத்து, தூய ஆவியாரின் அருள்நிறைந்த சகோதர அன்பினால் ஒரு திருஅவையை உருவாக்குவோம்!
மறைத்தூதுப் பணி
தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று இயேசு கூறியது போன்று, அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் அமைதியைக் கொணரும் மறைத்தூதுப் பணியாளர்களாக வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம். இதுவே நமக்கும் அமைதியை அருளும். இதுவே நாம் எடுக்கவேண்டிய தீர்மானம்.
எல்லோருக்கும் நம் இதயத்தில் இடம் கிடைக்க வேண்டும். நாடு, இன, சமூக மற்றும் மத வேறுபாடுகள் எல்லாம் இரண்டாம் நிலை, அவைகள் தடைகள் அல்ல என்று நாம் நம்பவேண்டும். மற்றவர்கள் அனைவரும் நமது சகோதர சகோதரிகள், அதே மனிதச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மேலும் இயேசு உலகிற்குக் கொண்டு வந்த அமைதி அனைவருக்கும் உரியது என்பதை உணர்ந்துகொள்ளவோம்.
கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவருடனும் ஒத்துழைக்கவும், வன்முறைச் சுழற்சியை உடைத்தெறியவும், வெறுப்பின் சூழ்ச்சிகளைத் தகர்க்கத்தழிக்கவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை நாம் நம்ப வேண்டும். ஆம், கிறிஸ்துவால் அனுப்பப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவரும் நம் உலகில் அமைதியின் மனசாட்சியாக இருக்க அழைக்கப்படுகின்றனர். இந்த மகத்தான நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், இனத்திற்கும், சுற்றுப்புறத்திற்கும் மற்றும் நகரத்திற்கும் அமைதி உரித்தாகுக என்று இயேசு கூறுகிறார் இன்று.
உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்ற நமது இயேசுவின் இந்த வார்த்தைகள் நம் இதயத்தின் மௌனத்தில் ஒலிக்கட்டும். இந்த வார்த்தைகள் நம்மிடம் பேசுவதைக் கேட்டு, நாம் மன்னிப்பின் சாட்சிகளாகவும்,, குழுமத்தை உருவாக்குபவர்களாகவும், உலகில் அமைதியை விதைப்பவர்களாகவும் வாழும் வாழ்வைத் தேர்ந்தெடுப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்