தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை - நற்செய்தி அறிவிப்பின் இயக்கம் தூயஆவியார்

அப்போஸ்தலிக்க பேரார்வத்தின் ஐந்தாம் பகுதியாக “நற்செய்தி அறிவிப்பின் இயக்கம் தூயஆவியார்” என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரையை ஆற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

பிப்ரவரி 22 புதன்கிழமையன்று, 2023ஆம் ஆண்டின் தவக்காலத் துவக்கமாம் சாம்பல் புதனை, திருஅவை சிறப்பித்து மகிழும் வேளையில், வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தவர்களுக்கு "நற்செய்தி அறிவிப்பின் இயக்கம் தூய ஆவியார்" என்ற தலைப்பில் தனது புதன் மறைக்கல்வி உரையை ஆற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத் 28:18-20

இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.

மத்தேயு நற்செய்தியில் உள்ள, “இயேசு சீடர்களுக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்” என்ற பகுதி வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்போஸ்தலிக்க பேரார்வத்தின் ஐந்தாம் பகுதியாக “நற்செய்தி அறிவிப்பின் இயக்கம் தூயஆவியார்” என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரையை ஆற்றினார் 

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

அப்போஸ்தலிக்கப் பேரார்வம் பற்றிய நமது பயணத் திட்டத்தில், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இயேசுவின் வார்த்தைகளிலிருந்து மீண்டும் தொடங்குவோம். நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை மகன் தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள் என்று உயிர்த்தெழுந்த இயேசு கூறுகிறார். போதனை செய்யவோ அல்லது மதமாற்றம் செய்யவோ அல்ல, மாறாக சீடர்களை உருவாக்குவதற்காக. அதாவது, அனைவரும் இயேசுவுடன் தொடர்பு கொள்ளவும், அவரை அறிந்து நேசிக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக சீடர்களை அனுப்புகின்றார். திருமுழுக்கு பெறுங்கள். திருமுழுக்கு என்பது, ஒரு வழிபாட்டு செயலைக் குறிப்பதற்கு முன்பாக ஒருவரின் வாழ்க்கையை தந்தை மகன் தூய ஆவியாரால்  நிறைத்தல் என்னும் முக்கிய செயலை வெளிப்படுத்துகிறது. ஒரு தந்தையாக, சகோதரனாக, ஆவியாக நம்மில் செயல்பட்டு, கடவுள் பிரசன்னத்தின் மகிழ்ச்சியை ஒவ்வொரு நாளும் அனுபவிக்க உதவுகின்றது.

இயேசு தம் சீடர்களிடம் “நீங்கள் போய்” என்று கூறும் வார்த்தையில், தந்தைக் கடவுளுக்கு நன்றியினைத் தூயஆவியின் துணையுடன் தெரிவித்து, ஆவியானவரால் மட்டுமே ஒருவர் கிறிஸ்துவின் பணியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதை வெளிப்படுத்துகின்றார். பெந்தெகொஸ்தே நாள் வரும் வரையிலும், தூயஆவியானவர் சீடர்கள் மேல் இறங்கும் வரையிலும், அவர்கள் பயத்தினால் மேல் அறையில் மறைந்து இருந்தார்கள். ஆவியானவருடைய பலத்தால், படிப்பறிவில்லாத அந்த மீனவர்களால் உலகையே மாற்ற வைத்தார். நற்செய்தி அறிவிப்பிற்கு மறைப்பணியாளர்களின் இதயங்களைத் தயார்படுத்துதல் ஆவியின் சக்தியில் மட்டுமே நடைபெறுகிறது ஏனெனில் ஆவியானவர் நற்செய்தியின் இயந்திரமாக இயக்கமாகச் செயல்படுகின்றார். இதனை திருத்தூதர்களின் செயலில் நாம் காணலாம். திருஅவையின் தொடக்கத்தின் ஒரு முக்கியமான தருணம் கூறப்படும் திருத்தூதர்களின் வாழ்வு, இதனை நமக்கு நிறைய கற்றுத்தருகின்றது. நம்பிக்கையோடு வந்த பரிசேயர்களோடு எப்படி நடந்து கொள்வது மோசெ சட்டங்களைக் கடைபிடிப்பதா வேண்டாமா? புறமதத்தவர்களுடன், யூத மக்களுக்குச் சொந்தமில்லாதவர்களுடன் எப்படி நடந்துகொள்வது? அவர்கள் மோசேயின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை இல்லையா? என்று சீடர்களின் மனத்தில் ஏராளமான குழப்பம். சட்டத்தைக் கடைப்பிடிப்பது இன்றியமையாதது என்று நம்பியவர்கள் அதைச் செய்யாதவர்கள் என  அவர்களிடையே இரண்டு குழுக்கள் உருவாகின்றன. திருத்தூதர்கள் வாழ்வில் முதல் எருசலேம் சங்கம் இதுதான். குழப்பத்தை எவ்வாறு தீர்ப்பது என்றும், பாரம்பரியம் மற்றும் புதுமைகளுக்கு இடையே ஒரு நல்ல இணக்கமும் இச்சூழலில் தேடப்பட்டிருக்கலாம். சில விதிகள் கவனிக்கப்படுகின்றன, மற்றவை புறக்கணிக்கப்படுகின்றன. ஆயினும் திருத்தூதர்கள் இந்த மனித ஞானத்தைப் பின்பற்றாமல், தங்களை எதிர்பார்த்திருந்த ஆவியானவரின் செயலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். எனவே தூய ஆவியார் சீடர்கள் மீதும்  பரிசேயர்கள் மீதும் இறங்குகிறார்.

சட்டத்துடன் இணைக்கப்பட்ட எல்லா கடமைகளையும் நீக்கி, சீடர்கள் தங்கள் இறுதி முடிவுகளைத் தெரிவிக்கும் போது, நாங்களும் தூய ஆவியானவரும் தீர்மானித்தோம். என்று தங்களையும் ஒன்றாக தூய ஆவியாருடன் இணைக்கின்றார்கள். வெவ்வேறு உணர்வுகள் மற்றும் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், அவர்கள் தங்களைப் பிரித்துக் கொள்ளாமல் ஆவியாரின் பேச்சைக் கேட்கிறார்கள். ஒவ்வொரு சமய பாரம்பரியமும் இயேசுவை சந்திப்பதை எளிதாக்கினால் பயனுள்ளதாக இருக்கும், திருஅவையில் உள்ள  அனைத்தும் பழமைவாதிகள் அல்லது முற்போக்காளர்களின் கருத்துக்களுக்கு அல்ல மாறாக, நற்செய்தி அறிவிப்பின் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும். இயேசு மக்களின் வாழ்க்கையைச் சென்றடைகிறார். எனவே ஒவ்வொரு தேர்வும், பயன்பாடும், கட்டமைப்பும் பாரம்பரியமும் கிறிஸ்துவின் அறிவிப்பிற்கு ஆதரவளிக்கும் அளவிற்கு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு ஆவியானவர் திருஅவையின் பாதையில் ஒளியை ஏற்படுத்துகின்றார். உண்மையில், அவர் நம் இதயங்களின் ஒளி மட்டுமல்ல, திருஅவையை வழிநடத்தும் ஒளி என்று அவர் தெளிவுபடுத்துகிறார், அவற்றை வேறுபடுத்தி, பகுத்தறிய உதவுகிறார். இக்காரணத்திற்காக அவரை அடிக்கடி அழைப்பது அவசியம்; தவக்காலத்தின் தொடக்கத்தில் இருக்கும் நாம் அவற்றை தொடர்ந்து செய்வோம். ஏனெனில், ஒரே தலத்திருஅவையாக நன்கு வரையறுக்கப்பட்ட நேரங்கள், இடைவெளிகள், ஒழுங்கமைக்கப்பட்ட சமூகங்கள், நிறுவனங்கள், இயக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம், ஆனால் ஆவியானவரின்றி அனைத்தும் ஆன்மா இல்லாததாகவே இருக்கும். திருஅவை தூயஆவியாரின் செப உதவி இன்றி அவரது உடனிருப்பின்றி இருந்தால் அதன் புதுமைத்தன்மை மறைக்கப்பட்டு மலடாகிவிடும், மறைப்பணியின் சுடரும் அணைந்துவிடும்.

ஆவியானவர் நம்மை வெளியே அழைத்துச் செல்கிறார், நம்பிக்கையில் நம்மை உறுதிப்படுத்த அதை அறிவிக்க, நாம் யார் என்பதை மீண்டும் கண்டறியும் பணியில் நாம் முன்னேறிச்செல்ல நம்மை உந்தித்தள்ளுகிறார். திருத்தூதர் பவுல் பரிந்துரைப்பது போல தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். (1தெச 5:19). நாம் அடிக்கடி ஆவியானவரிடம் ஜெபிப்போம், அவரை அழைப்போம், அவருடைய ஒளி நம்மில் எரியுமாறு ஒவ்வொரு நாளும் அவரிடம் கேட்போம். நாம் சந்திக்கும் மக்களுடன் ஒன்றிணைந்து இயேசுவின் சீடர்களாக மாற, ஒவ்வொரு கூட்டத்திற்கு முன்பும் ஆவியானவரை அழைப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, நாம் ஒரே திருஅவையாக தூய ஆவியாரிடமிருந்து தொடங்குவோம். சமூகவியல் ஆய்வுகள், பகுப்பாய்வுகள், சிரமங்களின் பட்டியல், எதிர்பார்ப்புகள், புகார்களின் பட்டியலிலிருந்து தொடங்குவது சந்தேகத்திற்கு இடமின்றி முக்கியமானது. இருப்பினும், ஆவியின் அனுபவங்களிலிருந்து தொடங்குவது மிகவும் முக்கியமானது: இதுவே உண்மையான தொடக்கப் புள்ளி. எனவே அவற்றைத் தேடுவது, பட்டியலிடுவது, படிப்பது, விளக்குவது அவசியம் என்பதைஉணர்வோம். இந்த வெளிச்சத்திற்கு நாம் நம்மைத் திறக்கிறோமா, அதற்கு இடம் கொடுக்கின்றோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள முயற்சிப்போம்: நான் ஆவியை அழைக்கிறேனா? மாறிவரும் உலகில் கடவுளின் ஆறுதலின் முதன்மைக்கு சாட்சியாக, என் உள்ளத்தைத் திறக்கின்றேனா? இயேசுவை எனக்குள் கொண்டுவரும்படி என்னை அழைக்கும் தூய ஆவியாரால் வழிநடத்தப்படுவதை நான் அனுமதிக்கிறேனா? என்று சிந்திப்போம்.

இவ்வாறு தன் மறைக்கல்வி உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்றைய பார்வையாளர்களாக பங்கேற்ற ஆங்கிலம் பேசும் திருப்பயணிகளைக் குறிப்பாக நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த குழுக்களை  வரவேற்றார். மேலும் இன்று நாம் தொடங்கும் தவக்காலப் பயணம், தூய ஆவியின் அருளால் சுத்திகரிக்கப்படவும் புதுப்பிக்கப்படவும் நம்மை அனுமதிக்க வேண்டும் என்றும், இத்தகைய நல்இதயம் உயிர்ப்புப் பெருவிழாவிற்கு நம்மை அழைத்து வரட்டும் என்றும் கூறினார். அதன்பின் கூடியிருந்த மக்களைப் பார்த்து, உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் மீட்பராகிய கிறிஸ்துவில் மகிழ்ச்சியும் அமைதியும்  நிலைக்கட்டும் என்று கூறி தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2023, 09:45