உணவு, தவிர்க்க முடியாத மனிதரின் அடிப்படை உரிமை : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இன்றும் கூட, "பசியால் இலட்சக்கணக்கான மக்கள் அவதியுற்று இறக்கும் அதேவேளையில், டன் கணக்கில் உணவுகள் தூக்கி எறியப்பட்டு விரயமாக்கப்படுகின்றன என்று வேதனை தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரேசில் ஆயர்பேரவையின் முன்முயற்சியாக அமையும் தவக்கால, உடன்பிறந்த உறவின் பரப்புரையின் தொடக்க நிகழ்விற்கு வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பசி என்பது உண்மையிலேயே ஒர் ஊழல் என்றும், ஒரு பெருங்குற்றம் என்றும் கோடிட்டுக்காட்டியுள்ளார்.
ஓவொரு தவக்காலமும் நம்மை கடவுளைநோக்கிய மனமாற்றத்திற்கு அழைக்கிறது என்றும், ஆண்டவரின் உயிர்ப்பு விழாவின் கொண்டாட்டத்திற்கு நாம் தயாராகும் வேளை, இறைவேண்டல், பகிர்வு, உண்ணாநோன்பு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன என்றும், நம்மை தூய்மையாக்கும் துணையாளராம் தூய ஆவியாரின் செயலுடன் ஒத்துழைக்க நமது ஒப்புரவு செயல்களும் உதவுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
இறைவனைச் சந்திப்பதற்கான இந்தப் பயணத்தில் இறைநம்பிக்கையுள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில், இவ்வாண்டு நீங்கள் மேற்கொண்டுள்ள உடன்பிறந்த உறவின் பரப்புரை, பசியின் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள தேவையிலுள்ள நமது சகோதரர் சகோதரிகளின் பக்கம் நம் பார்வையைத் திருப்ப வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” (மத் 14:16) என இயேசு அவருடைய சீடர்களுக்கு அன்று கூறிய வார்த்தைகள், நம்மிடமுள்ள நிறைய அல்லது சிறியவற்றிலிருந்து போதுமான அளவு கூட உணவில்லாத நமது சகோதரர் சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் பசியைப் போக்கவும் இன்று நமக்கும் அழைப்பு விடுகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
பசியுற்று இருப்பவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதன் வழியாக ஆண்டவராம் இயேசுவைத் திருப்திபடுத்துகிறோம் என்பதை நாம் அறிவோம் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்களா?" (மத் 25: 42) என்ற தனது வார்த்தைகள் வழியாக, பசியுற்ற மக்களுடன் இயேசு தன்னை அடையாளப்படுத்துகிறார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
துயரத்தை அனுபவிப்பவர்கள் அனைவரும் நம்மிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல, மாறாக, அவர்களும் நம்மைப் போல் சதையும் இரத்தமும் கொண்டவர்கள் என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பசியால் துயருறும் அவர்களுக்கும் உதவிக் கரங்கள் நீட்டப்படவேண்டும் என்றும், சகோதரத்துவம் என்பது நம் உலகில் குடியுரிமை பெறும் உரிமையைப் பெற்றுள்ளது என்பதையும் நினைவில் கொள்வோம் என்றும் விளக்கியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்