பனாமா பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அமெரிக்காவிற்குப் பயணித்த புலம்பெயர்ந்தோர் பயணம் செய்த பேருந்து பனாமா அருகில் விபத்துக்குள்ளானதில் ஏறக்குறைய 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆன்மிக உடனிருப்பையும் வெளிப்படுத்தி இரங்கல் தந்தி ஒன்றினை பனாமா கர்தினால் José Luis Lacunza Maestrojuán, அவர்களுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 16 வியாழனன்று பனாமாவில் நடந்த சாலை விபத்தில் இறந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து, திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திட்டு அனுப்பப்பட்ட தந்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களின் துன்பத்தோடு தன் ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், காயமடைந்தவர்களைக் குணப்படுத்த கடவுளின் அருளைக் கேட்பதாகவும் அத்தந்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
காயமடைந்தவர்களில் ஏறக்குறைய பத்து சிறார் உள்ளனர் என்றும் அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் செய்திகள் தெரியவருகின்றன. மொத்தம் 66 புலம்பெயர்ந்தோர் பயணம் செய்த பேருந்தானது Costa Rica என்னுமிடத்திற்கு செல்ல பனாமா அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட பேருந்தாகும்.
பனாமா அதிபர் லாரன்டினோ கார்டிசோ, தனது இரங்கலையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தும் வகையில், விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.
இறந்தவர்களில் கியூபா குடிமக்களும் அடங்குவதாக கியூபாவின் வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் தெரிவித்த நிலையில் பனாமாவில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்காவிற்குச் செல்ல பனாமாவிற்கு தரைவழியாக வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், 2022ஆம் ஆண்டில் மட்டும் இங்கு குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை 2,48,000 என்றும் தெரியவருகின்றது.
Colombia விலிருந்து Darien Gap வழியாக அமெரிக்காவை அடையும் புலம்பெயர்ந்தோரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெனிசுலா நாட்டினர் என்றும், பலர் ஹைட்டியர்கள், கியூபர்கள், ஆப்பிரிக்க மற்றும் ஆசிய குடிமக்களும் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்