தேடுதல்

அமைதியின் விதையை உள்ளத்தில் விதையுங்கள்

இஸ்ரயேல் அமெரிக்கத் தயாரிப்பாளரும் ஆஸ்கார் விருது பெற்றவருமான Evgeny Afineevsky என்பவரால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது "Freedom on Fire: Ukraine's Fight for Freedom" என்கின்ற ஆவணப்படம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நிலத்திலிருந்து மண்ணை எடுத்து மனிதனைப் படைத்த கடவுள், பூமியை அழகாக்கவும் வளர்க்கவுமே அவ்வாறு செய்தார் என்றும், அதற்கு எதிர்மாறாக நடந்துகொண்டிருக்கும் போரைத் தவிர்க்க அமைதி என்னும் விதையை நமக்குள் விதைக்க வேண்டும் என்று செபித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 24 வெள்ளிக்கிழமை இரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு முடிவுற்ற நிலையில் அத்துன்பமான நிகழ்வுகள் ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டு, வத்திக்கானின் சினோடல் புதிய அறையில் வெளியிடப்பட்ட நிகழ்வில் பங்கேற்றபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

​​நிலத்திலிருந்து மண்ணை எடுத்து கடவுள் மனிதனைப் படைத்தது, அதனை அழகாக வளரச் செய்யவேண்டும் என்பதற்காகவே என்றும், நடந்து கொண்டிருக்கும் போர் இதற்கு முற்றிலும் எதிர்மாறானது என்றும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்கள், பெண்கள், சிறார், முதியோர் என அனைவரையும் அழிக்கும் இப்போரை வளர விடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.  

உக்ரைனைப் பார்த்து அதற்காக செபிப்போம் அதன் துன்பத்திற்கு நம் இதயங்களைத் திறப்போம் என்றும், இப்போர் நம்மை குறைவுபடுத்தும், அழிவுக்குட்படுத்தும் என்பதற்காக, துன்புறுவதற்கும் அழுவதற்கும் வெட்கப்பட வேண்டாம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆவணப்படக் காட்சியின் போது திருத்தந்தை
ஆவணப்படக் காட்சியின் போது திருத்தந்தை

கடவுள் படைத்த அழகான உலகை மனித சுய நலத்தால் அழிக்காமல் இருக்க நம் இதயங்களை, மனங்களை, கண்களைக் குணப்படுத்த இறைவனின் அருளை வேண்டுவோம் என்றும், அமைதியின் விதையை நமக்குள் விதைப்போம் என்றும் கூறி செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஸ்ரயேல் அமெரிக்க தயாரிப்பாளரும் ஆஸ்கார் விருது பெற்றவருமான Evgeny Afineevsky என்பவரால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட "Freedom on Fire: Ukraine's Fight for Freedom"  ஆவணப்படத்தினை பார்த்தும், போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த வீரர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதலையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏறக்குறைய 240 விருந்தினர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் தேவையிலிருப்பவர்கள், புலம்பெயர்ந்தோர், உரோமில் உள்ள உக்ரேனிய சமூகத்தின் உறுப்பினர்கள், அவர்களுக்கு உதவி வழங்கும் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கர்தினால் கோன்ராட் கிராஜெவ்ஸ்கி ஆகியோரும் பங்கேற்றனர்.  

நிகழ்வின் இறுதியில், போரினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் சிலரைச் சந்தித்தும் நாட்டின் அமைதிக்கான அருள்வேண்டி உக்ரைன் நாட்டுக் கொடியை முத்தமிட்டும் தன் உடன் இருப்பையும் ஆறுதலையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 February 2023, 13:27