பொருளாதாரம் எப்போதும் சமூகப் பொருளாதாரமாக...
மெரினா ராஜ் - வத்திக்கான்
பெரும் தொழில்களை நடத்தும் ஒரு சிலரின் கைகளில் செல்வம் இருப்பதால், எளிய மக்கள் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள் என்றும், பொருளாதாரம் எப்போதும் சமூகமாக, சமூக சேவையில் சமூகப் பொருளாதாரமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 28 செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட பெல்ஜிய கத்தோலிக்க வார இதழான "டெர்சியோ"விற்கு அளித்த நேர்காணலின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அறிவற்ற போரினால் உலகில் பெரும்பாலான மக்கள் உண்ணவும் வாழவும் சிரமப்படுகின்றார்கள் என்றும், போர் பெரிய ஆயுதத் தொழில் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் முதல் தற்போதைய சினோடல் செயல்முறை வரை, உக்ரைன் போர் முதல் உலகில் மறக்கப்பட்ட மோதல்கள் வரை என பல்வேறு கருத்துக்களை நேர்காணல் வழியாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, குறிப்பாக, யாரையும் பின்தள்ளாத பொருளாதார வளர்ச்சியின் புதிய மாதிரியை விரிவுபடுத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் பற்றியும் அதன் தொடர்ச்சி பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஒரு திருஅவையில் எடுக்கப்படும் முடிவுகள் முழுமையாக நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நூற்றாண்டு ஆகும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்றும் கடவுளின் தூய மக்கள் வழியாக வரலாற்றில் கடவுள் செய்யும் காரியங்களில் ஒன்றுதான் சங்கம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையை இன்னும் உயிர்ப்புடன் ஆக்குவதற்கான சவாலாக சங்கம் உள்ளது என்றும், சங்கம் தலத்திருஅவையைப் புதுப்பிக்கிறது என்றும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எப்போதும் முன்னோக்கி செல்லும் தாயாம் திருஅவையில், சங்கம் அதிக முதிர்ச்சிக்கான கதவைத் திறந்து காலத்தின் அறிகுறிகளுடன் மிகவும் ஒத்துப்போகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே திருஅவை, அமைதிக்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும், தன்னுடைய மாஸ்கோ பயண விருப்பம், பல கர்தினால்களின் உக்ரைன் பயணம் போன்றவற்றையும் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை,
அறிவற்ற போர், பெரிய ஆயுதத் தொழிலின் விளவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பணக்கார நாடு பலவீனமடையத் தொடங்கும் போது, அது மீண்டும் வலுவாக இருக்க ஒரு போர் தேவை என்று கூறப்படுவதால், அதற்கு ஆயுதங்களும் தயாராகின்றன என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலத்திருஅவை, பிரான்சிஸின் பொருளாதாரம், அருள்பணியாளர்களின் பணி, போன்ற பல கருத்துக்களை இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முதல் உலகப் போர் நடைபெற்று நூறாண்டு, பாரிஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்ற காரணங்களுக்காக, "Tertio" கத்தோலிக்க வார இதழ் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 17, அன்று திருத்தந்தை பிரான்சிஸை நேர்காணல் செய்துள்ளது. இம்முறை திருத்தந்தையின் பத்தாவது ஆண்டு தலைமைத்துவ நினைவு நாளான 2023 மார்ச் 13, அன்று ... புதிய நேர்காணல் திங்கள்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்