உணர்வுப்பூர்வமாக உங்களோடு இருக்கின்றேன் : திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகத் தொடர்ந்து உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 8, இப்புதனன்று, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற புதன் பொது மறைக்கல்வி உரைக்குப் பின்பு இவ்வாறு வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நேரத்தில், எனது நினைவுகள், அண்டை நாடுகளில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நோக்கிச் செல்கின்றன என்றும் தெரிவித்தார்.
உணர்வுப்பூர்வமாக நான் அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்றேன் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் மற்றும் இந்தப் பேரழிவு பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது உடனிருப்பை வெளிப்படுத்துகின்றேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தத் துயரத்தை எதிர்கொண்டுள்ள நமது சகோதரர் சகோதரிகள் அனைவரும் அதிலிருந்து வெளிவரவேண்டும் என்று நாம் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மக்கள் பாதுகாக்கப்பட வேண்டி இப்போது நம் அன்னை மரியாவிடம் மன்றாடுவோம் என்று கூறி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! என்ற செபத்தை சொல்லி வேண்டினார்.
நிவாரண உதவிகளை கொண்டு வர உழைப்பவர்களுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுடன் உங்களின் ஒன்றிப்பைக் காட்டுங்கள் என்று திருப்பயணிகளை ஊக்கமூட்டியதுடன், அந்நாடுகளில் சில ஏற்கனவே நீண்ட போரினால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் எடுத்துரைத்தார்.
பிப்ரவரி 6, இத்திங்களன்று, துருக்கியில் சிரியாவிலும் ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்களில் இதுவரை ஏறத்தாழ 11,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்