தேடுதல்

கல்வியில் முதலீடு செய்வது அவசரமானது : திருத்தந்தை

கல்விதான் எதிர்காலத்திற்கான பாதை, காங்கோ நாட்டின் மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கான பாதை இதுவே: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ்  சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 31, இச்செவ்வாயன்று, காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாஷாவில், அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.

காங்கோ மக்களாகிய நீங்கள், நாட்டைத் துண்டாக்கும் மோசமான முயற்சிகளுக்கு எதிராக உங்கள் மாண்பையும்,  நாட்டின் ஒருமைப்பாட்டையும் காக்கப் போராடும் வேளை, இயேசுவின் பெயரால், நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான திருப்பயணியாக உங்களிடம் நான் வந்துள்ளேன். இங்கு உங்களோடு இருக்க நான் மிகவும் ஆசை கொண்டேன். இப்போது முழு கத்தோலிக்கத் திருஅவையின் நெருக்கத்தையும், பாசத்தையும் ஆறுதலையும் உங்களுக்குக் கொடுப்பதற்காகவும் உங்களிடம் வந்துள்ளேன்.

வைரத்தைவிட விலைமதிப்பற்றவர்கள்!  

இந்த நிலத்தின் ஒளிமயமான அழகைக் குறிக்கும் ஒரு உருவத்தைப் பயன்படுத்தி நான் உங்களிடம் பேச விரும்புகிறேன்.  அந்த உருவப் பொருள்தான்  வைரம். அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, உங்கள் நாடு உண்மையிலேயே படைப்பின் வைரமாகும். அதேநேரத்தில், நீங்கள் அனைவரும், இந்த வைரத்தை விடவும் விலைமதிப்பற்றவர்கள்! இந்தத் தூய வைரத்தைப் போல, உங்களின் மாண்பு மற்றும் நீங்கள் வாழும் நாடாகிய இந்த இல்லத்தை நல்லிணக்கத்துடனும் அமைதியுடனும் பாதுகாக்கத் துணிவுடன் அழைக்கப்படுகிறீர்கள்.

"கடின உழைப்பின் வழியாக  முன்பை விட அழகான ஒரு நாட்டை அமைதியுடன் உருவாக்குவோம்." என்ற  உங்கள் தேசியக் கீதத்தின் உணர்வைப் புதுப்பித்து, கனவு கண்டு, அதன் செய்தியை நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள். அமைதியும் வளர்ச்சியும் இதயங்களிலிருந்து பிறக்கிறது, ஏனென்றால், கடவுளின் உதவியால், ஆண்களும் பெண்களும் நீதி மற்றும் மன்னிப்பு, ஒப்புரவு மற்றும் நல்லிணக்கம், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் தாங்கள் பெற்ற பல திறமைகளை நன்றாகப் பயன்படுத்துவதில் வல்லவர்கள் என்பதை உணர்ந்திடுங்கள்.

வைரம் பன்மைத்துவத்தின் அடையாளம்

வைரம் மெருகூட்டப்பட்டவுடன், அதன் அழகு அதன் வடிவத்திலிருந்தும், அதன் பல அம்சங்களின் இணக்கமான அமைப்பிலிருந்தும் பெறப்படுகிறது. அதேபோல், பன்மைத்துவத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தைக் கொண்டதாக விளங்கும் இந்த நாட்டில் பன்முகத்தன்மையை வளர்த்திடுங்கள்.

நம் விண்ணகத்தந்தை, நாம் ஒருவரையொருவர் ஒரே குடும்பத்தின் சகோதரர் சகோதரிகளாக ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு எதிராக அல்ல மாறாக, மற்றவர்களுடன் இணைந்து பிறரின் எதிர்காலத்திற்காக உழைக்க வேண்டும் என்று விரும்புகிறார். Bintu bantu என்ற உங்களின் பழமொழிகளில் ஒன்று, உண்மையான செல்வம் மக்களிடத்திலும், ஒருவருக்கொருவர் இடையில் நிலவும் உறவுமுறையிலும் காணப்படுவதாகக் கூறுகிறது.

வைரம், தான் பெறும் ஒளியை பிரதிபலிக்கிறது

வைரமானது, அதன் வெளிப்படைத்தன்மையில், அது பெறும் ஒளியை அற்புதமாக பிரதிபலிக்கிறது. அதுபோல, சமூகத்தில் நீங்கள் வகிக்கும் பல்வேறுப் பணிகளில் வெளிப்படைத்தன்மையுடன் சிறப்பாக பணிசெய்ய அழைக்கப்படுகிறீர்கள். பணி சிறப்பாக வடிவமைக்கப்பட்டால்தான் அதிகாரம் அர்த்தமுள்ளதாக மாறும். இவ்விதத்தில் நாட்டுப்பணிகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. மக்கள் தங்களை ஆள்பவர்களின் நெருக்கத்தை உணரும்போது அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பக்கம் கடவுள் எப்போதும் இருக்கிறார் (காண்க. மத் 5:6). எல்லா இடங்களிலும் சட்டம் மற்றும் சமத்துவத்தை ஊக்குவிப்பதில் ஒருவர் எப்போதும் சோர்வடையக் கூடாது, சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படல் மற்றும் தகவல்களைத் தவறாகக் கையாளுதல் ஆகியவற்றை அவர் எதிர்த்துப் போராட வேண்டும்.

வைரம் மெருகூட்டப்பட வேண்டும்

பூமியிலிருந்து எடுக்கப்படும் வைரமானது கடினமானது, ஆகவே, அது மெருகூட்டப்பட வேண்டும். இந்த நிலங்களின் விலைமதிப்பற்ற வைரங்களாகிய இந்த தேசத்தின் மக்களும் மெருகூட்டப்பட வேண்டும். அதாவது,  அவர்களின் உள்ளார்ந்த திறமைகளை பிரகாசமாக ஒளிரச் செய்யும் கல்வியை அவர்கள் அணுக வேண்டும். எல்லாவற்றிற்கும் கல்விதான் அடிப்படையானது. இதுவே எதிர்காலத்திற்கான பாதை, இந்த நாட்டின் மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கான சிறந்த வழி இதுவே.

கல்வியில் முதலீடு செய்வது அவசரமானது. நன்றாகக் கல்வி பயின்றால் மட்டுமே சமுதாயங்கள் ஒருங்கிணைக்கப்படும். மக்கள் தங்களுக்கான வாய்ப்புகளை உணர்ந்து, பொறுப்புடனும் விடாமுயற்சியுடனும் அவற்றை வளர்க்கும் திறன் கொண்டவர்களாக இருந்தால் மட்டுமே சுயாட்சி சாத்தியப்படும்.

படைப்பை பாதுகாக்கத் தூண்டும் வைரம்

பூமியின் கொடையாகிய வைரமானது, இயற்கை சூழலைப் பாதுகாப்பதிலும், படைப்பின் நல்ல பாதுகாவலர்களாக இருப்பதிலும் நமக்குள்ள பொறுப்பை நினைவுபடுத்துகிறது.

வைரம் எதிர்ப்புத் திறன் கொண்டது

தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் பல அமைதியின்மை சூழ்நிலைகள் காங்கோ மக்களின் எதிர்ப்பை வலுவிழக்கச் செய்யலாம், அவர்களின் உறுதியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம், மற்றும் ஊக்கமின்மை மற்றும் பின்வாங்குவதற்கு வழிவகுக்கலாம். ஆனாலும்கூட, எதையும் புதிதாகத் தொடங்குவதற்கான வலிமையை எப்போதும் நமக்குத் தரும் கிறிஸ்துவின் பெயரால், இந்நாட்டின் மக்களே, சமூக மாற்றத்தை துணிவுடன் மேற்கொள்ள உங்கள் அனைவரையும் ஊக்குவிக்க விரும்புகிறேன்.

இந்த மகத்தான நாட்டிற்கு அமைதியான, இணக்கமான மற்றும் வளமான எதிர்காலத்தை அடைவதற்கான அனைத்து முயற்சிகளிலும் எனது செபங்கள் வழியாக நான் உங்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். கடவுள்  காங்கோ நாடு முழுவதையும் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 பிப்ரவரி 2023, 13:52