தேடுதல்

பூர்வீக இனக்குழு உலகளாவியக் கூட்டத்தின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் பூர்வீக இனக்குழு உலகளாவியக் கூட்டத்தின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகள் பூர்வீக இனக்குழுக்களிடம் உள்ளன

"காலநிலை மாற்றத்தில் பூர்வீகஇனமக்களின் தலைமைத்துவம்: மீள்தன்மை மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த சமூக அடிப்படையிலான தீர்வுகள்" என்ற கருப்பொருளில் இவ்வாண்டுக் கூட்டம் நடைபெற உள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான் 

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் போன்றவை மனிதகுலத்திற்கு ஏற்படுத்தும் பெரிய சவால்களுக்கு, உலகளாவிய தீர்வுகளைக் கண்டறிவதற்கான ஞானம் பூர்வீகஇன  மக்களிடம் உள்ளது என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அம்மக்கள் ஆற்றும் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வாய்ப்பாக உலகளாவிய கூட்டம் அமைகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 10 வெள்ளிக்கிழமை IFAD எனப்படும் பன்னாட்டு விவசாய நிதி மற்றும் மேலாண்மை நிறுவனத்தாரால் ஒருங்கிணைக்கப்பட்ட 6ஆவது பூர்வீக இனக்குழுக்களுக்கான உலகளாவியக் கூட்டத்தின் பிரதிநிதிகளை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து மகிழ்ந்தபோது இவ்வாறு குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் வாழும் பொதுவான இல்லமாகிய இப்பூமியை மேம்படுத்த விரும்பினால், வாழ்க்கை முறைகளில் ஆழமான மாற்றங்கள், உற்பத்தி மற்றும் நுகர்வு மாதிரிகள் அவசியம் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயற்கை வளங்களை கவனமாக பயன்படுத்துவது எப்படி என்பதை நாம் பூர்வீகஇனமக்களின் வாழ்க்கை முறையிலிருந்து சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.  

திருத்தந்தை பிரான்சிஸ் உடன் பங்கேற்பாளர்கள்
திருத்தந்தை பிரான்சிஸ் உடன் பங்கேற்பாளர்கள்

"காலநிலை மாற்றத்தில் பூர்வீகஇனமக்களின் தலைமைத்துவம், மீள்தன்மை மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த சமூக அடிப்படையிலான தீர்வுகள்" என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்வாண்டுக் கூட்டத்தின் பிரதிநிதிகளிடம் உலகெங்கிலும் உள்ள பூர்வீக இனமக்களை அவர்களின் கலாச்சாரம், மொழி, பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்துடன்  அங்கீகரிக்கவும், அவர்களின் மாண்பு மற்றும் உரிமைகளை மதிக்கவும், வேண்டுமென்று கேட்டுக் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் நமது மனித குடும்பத்தின் செல்வம் பூர்வீகஇனமக்களை மதிப்பதில் துல்லியமாக வெளிப்படுகின்றது என்பதை உணர்ந்து பன்முகத்தன்மையில் கால நிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

பூர்வீகஇனமக்களுக்கு உதவி வரும் IFAD இன் பணி பாராட்டுக்குரியது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மக்களை ஆதரிக்கும் நிதிக்கு நன்றியையும், அவர்களின் வாழ்விற்கான முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும், உறுதியான மற்றும் தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டு ஒரு நியாயமான மாற்றத்தை அடைய வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2023, 12:09