தேடுதல்

சாம்பல், நம்மைப் பற்றிய உண்மையை நினைவூட்டுகிறது : திருத்தந்தை

தவக்காலம் நமது பழைய பாவ நிலையிலிருந்து விடுபட்டு ஆண்டவரை நோக்கித் திரும்புவும், அவருடன் ஒப்புரவை ஏற்படுத்தவும் உதவுகிறது: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தவக்காலம் என்பது நமது சுயநலத்தின் சங்கிலிகளை உடைத்தெறிந்து, ஒவ்வொரு நாளின் பயணத்திலும் சந்திப்பு மற்றும் செவிமடுத்தல் வழியாக நம் தோழர்களை  மீண்டும் கண்டுபிடிக்கும் சாதகமான காலமாகும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்ரவரி 22, இப்புதனன்று மாலை, உரோமையிலுள்ள புனித சபீனா பேராலயத்தில் நிகழ்ந்த திருநீற்றுப் புதன் திருப்பலியில் வழங்கிய மறையுரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தவக்காலம், நமது தோழர்களைச் சகோதரர் சகோதரிகளாக அன்புகூர்வதற்கு மீண்டும் ஒருமுறை கற்றுக்கொள்ளும் காலம் என்றும் எடுத்துரைத்தார்.

தவக்காலம் என்பது உண்மையில் நமது பழைய பாவ நிலையிலிருந்து விடுபட்டு ஆண்டவரை நோக்கித் திரும்புவும், அவருடன் ஒப்புரவை ஏற்படுத்தவும், நமது பலவீனமான மனிதகுலத்தின் சாம்பலுக்கு அடியில் மறைந்திருக்கும் தூய ஆவியாரின் நெருப்பை மீண்டும் எழுப்புவும் இதுவே சாதகமான நேரம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மைப் பற்றிய உண்மைக்குத் திரும்புதல், கடவுளிடமும் நமது சகோதரர் சகோதரிகளிடமும் திரும்புதல் ஆகிய இரண்டு தலைப்புகளின் கீழ் தனது மறையுரைச் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

நம்மைப் பற்றிய உண்மைக்குத் திரும்புதல்

சாம்பல் என்பது நாம் யார், எங்கிருந்து வருகிறோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அவை, இறைவன் ஒருவரே கடவுள் மற்றும் நாம் அவருடைய கைவேலைப்பாடுகள் என்ற நம் வாழ்வின் அடிப்படை உண்மைக்கு நம்மைத் திரும்பக் கொண்டுவருகின்றன என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு வாழ்வென்னும் உயிர் இருக்கின்றது, அதேவேளை, கடவுளே நமது வாழ்வும் உயிருமாய் இருக்கின்றார் என்றும், அவரே நமது படைப்பாளர், நாம் அவருடைய கைகளால் வடிவமைக்கப்பட்ட உடையக்கூடிய களிமண்ணாக இருக்கிறோம் என்றும் விவரித்தார்.

நாம் பூமியிலிருந்து வருகிறோம், நமக்கு விண்ணகம் தேவை; நமக்குக் கடவுள் தேவை, கடவுளுடன், நாம் நமது சாம்பலில் இருந்து எழுவோம் என்றும், அவர் இல்லாமல் நாம் வெறும் தூசியாய் இருக்கின்றோம் என்றும், சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது நெற்றியில் சாம்பலைப் பெறுவதற்கு நாம் பணிவுடன் தலை வணங்கும்போது, ​​நாம் இறைவனுடைய மக்கள், அவருக்கு மட்டுமே சொந்தமானவர்கள், என்ற உண்மை நமக்கு நினைவூட்டப்படுகிறது என்றும் விளக்கினார்.

கடவுளிடமும் நமது சகோதரர் சகோதரிகளிடமும் திரும்புதல்

நம்மைப் பற்றிய உண்மைக்குத் திரும்பியவுடன், நாம் தன்னிறைவு பெற்றவர்கள் அல்ல என்பது நினைவூட்டப்படும்போது, ​​​​இறைவனுடனான நமது தொடக்க உறவு மற்றும் மற்றவர்களுடனான நமது முக்கிய உறவுகளால் மட்டுமே நாம் இருக்கின்றோம் என்பதை உணர்கிறோம் என்று இரண்டாவது கருத்தை மையப்படுத்திப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், வாழ்க்கை என்பது ஒரு உறவுதான், நாம் அதை கடவுளிடமிருந்தும் நம் பெற்றோரிடமிருந்தும் பெறுகின்றோம் என்றும், அத்தகையதொரு உறவை இறைவனுக்கும் அவர் நம் அருகில் இருப்பதற்கு உதவியவர்களுக்கும் நன்றி செலுத்தி அதை எப்போதும் உயிர்ப்பிக்கவும் புதுப்பிக்கவும் வேண்டும் என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேற்கூறிய இந்த இரண்டு காரியங்களையும் நாம் செய்யவேண்டுமெனில் தர்மம் செய்தல், இறைவேண்டல், நோன்பு இருத்தல் ஆகிய மூன்று பெரிய பாதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வலியுறுத்தப்படுகிறோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தர்மம் செய்வதும்,  தொண்டு புரிவதும், தேவைப்படுவோரிடம் நம் இரக்கத்தின் அடையாளமாக இருப்பதுடன் மற்றவர்களிடம் திரும்புவதற்கும் இவைகள் நமக்கு உதவும் என்றும், இறைவேண்டல் என்பது, இறைத்தந்தையைச் சந்திப்பதற்கான நமது ஆழ்ந்த விருப்பத்திற்குக் குரல் கொடுப்பதுடன் நம்மை அவரிடம் திரும்பக் கொண்டுவரும் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோன்பு இருப்பது என்பது,  நம்மைச் சுமைப்படுத்தும் மிதமிஞ்சிய செயல்களை மகிழ்வுடன் துறந்து, உள்மனச் சுதந்திரத்தில் வளர்ந்து, நம்மைப் பற்றிய உண்மைக்குத் திரும்ப உதவும் ஆன்மீகப் பயிற்சிக் களமாக இருக்கும் என்றும் எடுத்துரைத்தார்

இந்தப் புனித காலத்தின் அருளைப் புறக்கணிக்காமல், சிலுவையில் நமது பார்வையை நிலைநிறுத்தி, தவக்காலத்தின்  வலிமை வாய்ந்த தூண்டுதல்களுக்குத் தாராளமாகப் பதிலளிப்போம் என்றும், இத்தவக்காலப் பயணத்தின் முடிவில், நம் சாம்பலிலிருந்து நம்மை எழுப்பக்கூடிய உயிருள்ள இறைவனை நாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் சந்திப்போம் என்றும் எடுத்துரைத்து தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2023, 14:20